search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு: சிமெண்டு குடோனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
    X

    டெங்கு குறித்து கலெக்டர் ஆய்வு: சிமெண்டு குடோனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

    தஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் வைத்திருந்த சிமெண்ட் குடோனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை டெங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஆய்வு செய்தார்.

    அப்போது நாஞ்சிக்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் கடை உள்ளது என்பதை கண்டுபிடித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இந்த கடையை ஆய்வு செய்து சுகாதாரமற்ற நிலை உள்ளதால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இந்த நிலையில் இன்று அதே கடையில் ஆய்வு செய்த போது சுகாதாரமற்ற நிலையில் தான் கடை இருந்தது. உடனே கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இன்னும் 2 நாட்களில் சுத்தம் செய்யவில்லை என்றால் மாநகராட்சி மூலம் நோட்டீசு அனுப்பப்படும் என்று எச்சரித்தார்.

    அதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் ஆய்வு செய்து போது ஏ.சி.யின் தண்ணீரை சுத்தம் செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தியாகியுள்ளது. உடனே பெட்ரோல் பங்கு உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு குடோனில் ஆய்வு செய்தார். அங்கு 10 டயர்களில் மழைநீர் தேங்கி இருந்தது. பின்னர் ஊழியர்களை கொண்டு டயர்களில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தினார். பின்பு தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யாமல் இருந்தது. டெங்கு கொசு எளிதில் உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் வைத்திருந்ததால் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    அதைத் தொடர்ந்து கார் பெயிண்டிங் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு குப்பைகள் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது.

    உடனே கடையின் உரிமையாளர்களை சிதறி கிடக்கும் பொருட்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இன்று கலெக்டர் நடத்திய ஆய்வின் போது மொத்தம் ரூ.37 ஆயிரம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் வரதராஜ், நகர்நல அலுவலர் நமச்சிவாயம், மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப் பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×