search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு
    X

    உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு

    உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாதது குறித்தான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் பெரோஸ் கான் மற்றும் செயலாளர் ராஜசேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
    சென்னை:

    உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நடத்தவில்லை எனக்கூறி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கடந்த 6-ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



    அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகினர். ஆனால் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டும், விசாரணைக்கு வராததால், 7-ம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டாவது முறையாக மாநில தேர்தல் ஆணையரும், ஆணைய செயலாளரும் ஆஜராகினர். அவர்கள் இருவரும் 10-ம் தேதி தலைமை நீதிபதி முன்பாக ஆஜராக வேண்டுமென அந்த அமர்வு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு 11-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்தது. இதற்காக மாநில தேர்தல் ஆணையரும், செயலாளரும் மூன்றாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

    அதையடுத்து நீதிபதிகள், இந்த அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதை பதிவு செய்துகொண்டு, இந்த வழக்கை இன்று ஒத்திவைத்தனர். விசாரணையின் போது இருவரும் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் மற்றும் செயலாளர் ராஜசேகர், தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாதது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்தனர்.

    உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்குடனும் செயல்படவில்லை என்பதால், அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொகுதி மறுவரையறை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அட்டவணப்படி செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தங்களது மனுவில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×