search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே அரசு அதிகாரி வாகனத்தை உடைத்த 6 பேர் கைது
    X

    நெல்லை அருகே அரசு அதிகாரி வாகனத்தை உடைத்த 6 பேர் கைது

    நெல்லை அருகே அரசு அதிகாரி வாகனத்தை உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 21 பேரை தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருப்பவர் சக்தி அனுபமா. இவர் நேற்று முதலமைச்சர் பங்கேற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்துவிட்டு அரசுக்கு சொந்தமான ஜீப்பில் ஊருக்கு புறப்பட்டு சென்றார். ஜீப்பை டிரைவர் மாரி மகாராஜன் என்பவர் ஓட்டினார். ஜீப் மானூர் அருகே உள்ள வெங்கலபொட்டல் பகுதியில் சென்றபோது முன்னால் ஒரு ஆட்டோ சென்றது. ஆட்டோவை பாளை அக்கன்நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.

    ஆட்டோவை ஜீப் முந்திசெல்லும்போது உரசியபடி சென்றதாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் ஜீப்பை வழிமறித்து சக்தி அனுபமாவிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது செந்திகுமாருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் சிலர் திரண்டு வந்தனர். அவர்கள் டிரைவர் மாரிமகாராஜனை சரமாரியாக தாக்கினர். மேலும் அரசு வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர்.

    அந்த வழியே சென்ற வேறு சில வாகனங்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. உடனே இதுபற்றி மானூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு தாழையூத்து டி.எஸ்.பி தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர்.

    கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த டிரைவர் மாரி மகாராஜன் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சக்தி அனுபமா மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் செந்தில்குமார், நாஞ்சான்குளத்தை சேர்ந்த சமுத்திரம்(60), மந்திரமூர்த்தி, சங்கரநயினார்(18), செல்லையா(53), பட்டவர்த்தியை சேர்ந்த மாரிமுத்து(21) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 21 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே சாலையில் சட்டவிரோதமாக கூடி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக செந்தில்குமார் உள்ளிட்டோர் மீது மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மானூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரிலும் மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து வெங்கலபொட்டல், ரஸ்தா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×