search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம்
    X

    சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம்

    சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. 2 மணி நேரம் இடைவிடாமல் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மீண்டும் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. தொடக்க முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் வறண்டு கிடந்த ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. சென்னையில் நவம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஒருசில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. அந்த மழையால் ஒருவாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை தமிழக அமைச்சர்கள் களத்தில் இறங்கி முடுக்கி விட்டனர். இதனால் வெள்ள சேதம் அதிகம் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் மழை எதுவும் இல்லாமல் இருந்ததால் மழைநீர் சூழ்ந்த பகுதியில் இருந்து தண்ணீர் முற்றிலும் வெளியேறியது. ஒருவாரம் ஓய்ந்து இருந்த நிலையில் நேற்றிரவு திடீரென பலத்த மழை பெய்தது.


    தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதனால் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    இரவு 8.30 மணி அளவில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. 2 மணி நேரம் இடைவிடாமல் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மீண்டும் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இரவு தொடங்கிய மழை அதிகாலை 5 மணி வரை நீடித்தது. விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. வீடுகளில் இருந்த மக்கள் பலத்த மழையின் சத்தத்தை கேட்டு மீண்டும் வெள்ளம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் காணப்பட்டனர்.

    வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது. ஒரேநாள் இரவில் பெய்த மழையால் ஒருசில சாலையில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்காமல் வடிந்து விட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

    ஆனால் இன்று பகலிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் இன்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக் கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    வடகடலோர மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்று மழை விட்டு விட்டு பெய்யும் என்றும் ஒருசில நேரங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 2 செ.மீ. மழையும், தாம்பரத்தில் 1.5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
    Next Story
    ×