search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறுப்பு பணம் ஒழிப்பில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது: ப.சிதம்பரம்
    X

    கறுப்பு பணம் ஒழிப்பில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது: ப.சிதம்பரம்

    கறுப்பு பணம் ஒழிப்பில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது என்று முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் தந்தி தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கே.:- வங்கியில் யார் பணம் டெபாசிட் செய்தாலும் எடுத்தாலும் தெரிந்து விடும் என்ற நிலை இருக்கும் போது அதுக்கு வரி விதித்து தான் தெரிய வேண்டுமா?

    ப.:- ஆமாம். வரி விதித்தால்தான் அது வருமான வரித்துறைக்கு தெரியும். அதனால் நாங்கள் எப்.ஐ.யு. என்ற அமைப்பை ஏற்படுத்தினோம்.

    மேலும் பண பரிவர்த்தனையில் 3-வது நபரும் தகவல் தர வேண்டும் என்பதற்காக வருமானவரி சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தோம்.

    ஒருவர் ஒரு சொத்தை வாங்கினால் அல்லது விற்றால் அதை அவர்கள் வருமான வரித்துறைக்கு சொல்லாவிட்டாலும் பத்திரப்பதிவுத்துறை தகவல் வந்து விடும்.

    கார் வாங்கினால் அதுபற்றிய விவரம் கார் டீலரிடம் இருந்து வந்து விடும். இதை வருமான வரி சட்டத்தில் கொண்டு வந்தோம்.

    கே.:- காங்கிரஸ் ஆட்சியின் போது எஸ்.ஐ.டி. என்ற புலனாய்வு அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதே?

    ப.:- வருமான வரித்துறையும், சம்பந்தப்பட்ட துறையும் தங்களது கடமையை ஒழுங்காக செய்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய 2 நீதிபதிகளை கொண்ட குழு அமைக்க கோர்ட்டு தீரப்பு கூறியது.

    அமைச்சர், அதிகாரிகள் இருக்கும் போது அவர்களை விட்டுவிட்டு குழுவில் நீதிபதிகளை நியமித்தால் நீதிபதிக்கு இதில் என்ன வேலை இருக்கிறது? அதனால்தான் இந்த தீர்ப்பு ஆய்வு செய்யப்பட வேண்டிய தீர்ப்பு என்று கூறி மறு ஆய்வு செய்யுமாறு கோர்ட்டில் முறையிட்டோம். ஆய்வு மனு விசாரணையில் இருக்கும் வரை எஸ்.ஐ.டி. அமைப்பை அமைக்க முடியாது என்றோம்.

    கே.:- இப்போது பாரதிய ஜனதா ஆட்சியில் இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதே?

    ப.:- எஸ்.ஐ.டி. அமைத்து என்ன செய்து விட்டார்கள்? அதில் உள்ள 2 நீதிபதிகள் பெயர் கூட பலருக்கு நினை விருக்காது, மறந்திருக்கும்.

    கே.:- 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டது என்று கூற முடியுமா?


    ப.:- என்றைக்குமே கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. பாரதிய ஜனதா ஆட்சியில் 2016 நவம்பர் 8-ல் பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை எடுத்தார்கள். இப்போது கறுப்பு பணம் ஒழிந்து விட்டதா? கறுப்பு பணத்தை ஒரு ஆண்டில் மட்டுமல்ல 9 ஆண்டு ஆனாலும் ஒழிக்க முடியாது.

    இதில் பாரதிய ஜனதா அரசு தோல்வி அடைந்து விட்டது. 100 கோடி மக்களை துன்பப் படுத்தியதுதான் மிச்சம். இந்தியாவில் ஒரு விசித்திரமான வருமான வரிமுறை உள்ளது. இந்தியாவில் ஏறத் தாழ சரிபாதி வருமானம், வருமான வரிக்கு உட்படாத வருமானமாக உள்ளது.

    வேளாண் வருமானம், அறக்கட்டளை வருமானம், சமய கோவில்கள் வருமானம், பழங்குடியின மக்கள் வருமானம், வடகிழக்கு மாநில குடிமக்கள் வருமானம் இவை அனைத்தும் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் அல்ல.

    இது ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் வரிவிதிப்பும் உள்ளது. இந்த இரண்டு முறையும் ஒரே நாட்டில் உள்ள சூழலில் இரு தரப்பினருக்கும் இடை யே பணப்பரிமாற்றம் இருக்காதா? தொடர்பு இருக்காதா?

    ஒரு விவசாயி வக்கீலை பார்க்க செல்வார். பணப் பரிமாற்றம் நடக்கும். ஒரு டாக்டரை நோயாளி பார்ப்பார் அங்கும் பண பரிமாற்றம் இருக்கும். அந்த பணம் இங்கே வரும். இந்த பணம் அங்கே செல்லும். அப்படி இருக்கும் போது கறுப்பு பணம் எப்படி ஒழியும். கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. மட்டுப் படுத்தத்தான் முடியும்.

    உதாரணத்திற்கு 3 லட்சம் பேரிடம் கணக்கில் வராத பணம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அல்லது கணக்கு சொல்ல முடியாத தொகையை வங்கியில் போட்டு வைத்துள்ளார் என்று வைத்து கொள்ளோம். 20 லட்சம் பேர் இம்மாதிரியான வரவு-செலவு வைத்துள்ளார்கள் என்று அரசு சொல்கிறது.

    இப்படிப்பட்டவர்கள் அதற்கான கணக்கை காட்டுவார்களா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும். இதற்காக 1 லட்சம் பேருக்கு நோட்டீசு கொடுக்கிறோம் என்று பிரதமர் மோடி அரசு சொல்கிறது.

    அதற்காக 100 கோடி மக்கள் மீது இவ்வளவு துன்பத்தையா சுமத்துவது? யார் உங்களுக்கு இந்த அதிகாரம் தந்தது?

    100 கோடி மக்கள் வங்கியில் கியூவில் நின்றது மட்டும் துன்பம் இல்லை. 2 நாள் பசியோடு இருந்ததும் துன்பம்தான்.

    குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்த வேளையில் பணம் கட்ட வழியின்றி அரசு ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் இறந்த குழந்தைகள் எத்தனைபேர்? இதற்கு யார் காரணம்?

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை 50 நாட்களில் சரியாகிவிடும். அப்படி சரியாகாவிட்டால் என்னை முச்சந்தியில் வையுங்கள் என்றாரே பிரதமர்? 50 நாட்களில் அவரால் சரி செய்ய முடியவில்லையே?

    சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டது மூடப்பட்டது தான். 3 மாதம் வேலையின்றி தவித்தார்களே? 15 கோடி அன்றாட தொழிலளர்களுக்கு 2, 3 வாரம் வேலை கிடைக்காததால் கடன் வாங்கி பிழைப்பு ஓட்டினார்கள். இந்த கடனையும் அடைக்க வங்கி வாசலில் காத்து கிடந்தார்கள்.

    எனவே வங்கியில் கியூவில் நின்றது மட்டும் துன்பம் அல்ல. 100 கோடி மக்கள் மீதும் இதை ஒரே நேரத்தில் திணித்ததும் துன்பம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×