search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் இளைஞர்களுக்கு போர்க்குணம் வர வேண்டும்: ப.சிதம்பரம் பேச்சு
    X

    காங்கிரஸ் இளைஞர்களுக்கு போர்க்குணம் வர வேண்டும்: ப.சிதம்பரம் பேச்சு

    பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்களுக்கு போர்க் குணம் வர வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசினார்.
    சென்னை:

    பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்களுக்கு போர்க் குணம் வர வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசினார்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மரகதம் சந்திரசேகரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத்தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மத்திய சென்னை முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கபாஷியம், மண்டல தலைவர் நாஞ்சில் பிரசாத், பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    பா.ஜ.க. இந்தியாவை ஆளும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் நம்மை போன்ற அந்த பெருமை அவர்களுக்கு உண்டா?. அந்த கட்சியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தலைவர்களாக இருக்கிறார்களா?. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உயர் பொறுப்பில் இருக்கிறார்களா?. இந்து மக்கள் மட்டும் தான் இந்தியா என்று நினைக்கும் கட்சி அது. அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்.

    மக்களிடையே பிளவை பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். நிதானமான தலைவர்கள் உருவாக வேண்டும். நிதானமான தலைவர்கள் போர்க்குரல் எழுப்ப வேண்டும். வாஜ்பாய், அத்வானி இருந்த பா.ஜ.க. வேறு. இப்போது இருக்கும் பா.ஜ.க. வேறு. இப்போது இருக்கும் பா.ஜ.க. எந்த அரசியல் நெறிகளையும் கடைப்பிடிப்பதில்லை. அவர்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றால் நமக்கு போர்க்குணம் வர வேண்டும். போர்க்குணம் கொண்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். இந்த இளைஞர்கள் கூட்டம் அனைத்து சமுதாயத்தில் இருந்தும் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    வருமானவரித்துறை சோதனை எல்லா இடங்களிலும் நடத்த வேண்டும். ஒரே இடத்தில் நடத்துவது சந்தேகத்தை வரவழைக்கிறது. ஜெயலலிதா இறந்தபோதே சோதனை நடத்தியிருந்தால் பல லட்சம் கோடி பணத்தை மீட்டு இருக்கலாம். அவர் இருக்கும் போதே துணிந்து சோதனை நடத்தியிருந்தால் 10 மடங்கு அளவுக்கு பணத்தை கைப்பற்றி இருக்கலாம். ஆட்சியை நடத்துபவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுத்து, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தலைமையே இல்லாத கட்சிக்கு இரட்டை இலை சின்னம் எதற்கு?. அ.தி.மு.க.வை வைத்து தமிழகத்தில் தன்னுடைய தளத்தை அமைத்துக்கொள்ள பா.ஜ.க. முயன்று வருகிறது.

    கோவையில் 18-ந்தேதி இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, ‘ஒருவர் வழிவிடும் போது தான் மற்றவர்கள் மேலே வர முடியும். காங்கிரஸ் தலைவர்கள் சொத்து சேர்க்காமல் வாழ்ந்தார்கள். முதல்-அமைச்சருக்கு உதவியாக இருந்தவர் பல லட்சம் கோடிக்கு அதிபராகி, இருப்பதை பார்க்க முடிகிறது. அவர்கள் வீடுகளில் சோதனை நடப்பதை இப்போது பார்க்க முடிகிறது. காமராஜர், கக்கன் போன்றவர்கள் எப்படி வாழ்ந்தார்கள். லஞ்ச ஊழல் கயவர்களை அழிக்க வேண்டும். ஏன் அமித்ஷா வீட்டில் சோதனை நடத்த வேண்டியது தானே. மத்திய பா.ஜ.க. அரசின் ஆயுட்காலம் இன்னும் 6 மாதம் தான். அதற்குள் தேர்தல் வரும், நம்முடைய தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வருவார்’ என்றார். 
    Next Story
    ×