search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர அம்மபள்ளி அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு
    X

    ஆந்திர அம்மபள்ளி அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு

    ஆந்திர அம்மபள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரானது திருவள்ளூர் மாவட்ட கொசஸ்தலை ஆற்றில் வந்தடைகிறது.

    திருவள்ளூர்:

    கடந்த 1975ம் ஆண்டு மழை நீரை சேமிப்பதற்காக ஆந்திர அரசு அம்மபள்ளி என்ற அணையை கட்டியது. 6 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் கடந்த வாரம் ஆந்திராவில் பெய்த கன மழையால் அணை நிரம்பியது. அதே நேரத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மலை மற்றும் வனப்பகுதிகளிலிருந்து வரும் நீரும் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணை நிரம்பிய நிலையில் மேலும் 600 முதல் 1000 கன அடி நீர் வருவதால் தேக்கி வைக்க இடம் இல்லாததால், தினந்தோறும் இரவு 10 மணிக்கு மேல் நீர் திறந்துவிட்டு அதிகாலை 2.30 மணி அளவில் நிறுத்தி விடுகின்றனர். இவ்வாறு திறந்துவிடப்படும் நீரானது திருவள்ளூர் மாவட்ட கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடையும்.

    இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்பெறும் வகையில், பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயரும் என்றும், 600 முதல் 1000 கன அடி வரை மட்டுமே நீர் திறக்கப்படுவதாலும் அதே நேரத்தில் இரவு நேரத்தில் தண்ணீர் திறந்துவிடுவதால் கரையோர மக்களுக்கும் பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் 2500 கன அடிக்கு மேல் நீர் திறந்துவிடும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அப்போது தான் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்றும் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் தற்போது 881 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக 340 கன அடி நீர் வரத்தாக உள்ளது. 16 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

    அதே போல் செம்பரம்பக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 1354 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. 164 கன அடி நீர் மழை காரணமாக நீர்வரத்தாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 48 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் இன்று 1329 கன அடியாக உயர்ந்துள்ளது.மழையால் 258 கன அடி நீர் வரத்தாக உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு 84 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    அதே போல் சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 565 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. மழையால் 139 கன அடி நீர் வரத்தாக உள்ளது.

    Next Story
    ×