search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்கால் கடலில் மூழ்கிய பிளஸ்-2 மாணவன் பலி
    X

    காரைக்கால் கடலில் மூழ்கிய பிளஸ்-2 மாணவன் பலி

    காரைக்கால் கடலில் மூழ்கி இறந்த பிளஸ் 2 மாணவன் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    காரைக்கால்:

    நாகை மாவட்டம், திருத்துறைபூண்டி, ரோக்க குத்தகை வாதை ரோட்டை சேர்ந்தவர் லெனின். இவரது மகன் தமிழ்வாணன்(17). இவர் நாகப்பட்டிணத்தில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போன்று வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு வந்த அவர், வகுப்பிற்கு செல்லாமல் அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் திருத்துறைப் பூண்டி பல்லார்கோவில் செங்கமேட்டுத் தெருவை சேர்ந்த பிரசன்னா(16) மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் திருவாரூர் மாவட்டம், செம்பியலூர் வார குப்பத்தை சேர்ந்த திலிப்ராஜ்(15) ஆகியோருடன் சேர்ந்து காரைக்கால் கடற்கரைக்கு வந்தார்.

    அப்போது அவர்களுக்கு கடலில் இறங்கி குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கடலில் இறங்கி மூவரும் ஆனந்தமாக குளித்தனர். அப்போது திடீரென்று எழுந்து வந்த ராட்சத அலை ஒன்று தமிழ்வாணனை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் தப்பி கரை சேர்ந்தனர்.

    பின்னர் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியதும் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலைய போலீசார், காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அலையில் சிக்கி மாயமான தமிழ்வாணனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு வரை அவர் கிடைக்க வில்லை. அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. இன்றும் தேடும் பணி நடைபெற்றது.

    இந்தநிலையில் கரிக்கலாச்சேரி கடற்கரை பகுதியில் இன்று மாணவன் தமிழ்வாணன் உடல் கரை ஒதுங்கியது.

    உடலை மீட்டு நிரவி போலீசார் விரைந்து வந்து காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. கடலில் மூழ்கி இறந்த தமிழ்வாணன் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    Next Story
    ×