search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மீண்டும் மழை: 15-ம் தேதி வரை நீடிக்கும் - இந்திய வானிலை மையம்
    X

    சென்னையில் மீண்டும் மழை: 15-ம் தேதி வரை நீடிக்கும் - இந்திய வானிலை மையம்

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னையில் 15-ம் தேதி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்தது.

    இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது.

    இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

    முடிச்சூர், வரதராஜபுரம், கோவிலம்பாக்கம், ஆதனூர் பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது.

    கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் இன்று காலையில் மீண்டும் மழை தொடங்கி விட்டது.



    சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், அடையார், தரமணி, திருவான்மியூர், மேற்கு மாம்பலம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, புழுதிவாக்கம், திருப்போரூர், காரைக்கால், மதகடிப்பட்டு உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

    இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    நுங்கம்பாக்கம் - 0.2

    காரைக்கால்- 22.2

    கன்னியாகுமரி- 0.8

    நாகை -7.2

    புதுச்சேரி- 3.0

    கடலூர்-0.3

    இந்த மழை குறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    தெற்கு அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சியாக பரவியுள்ளது.

    இலங்கை - தமிழகம் இடையேயான மன்னார் வளைகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் காரணமாக இன்று முதல் 15-ந்தேதி காலை 8.30 மணி முடிய 5 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று டெல்லி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குறிப்பாக மத்திய தமிழ்நாடு மற்றும் கடலோர பகுதிகளிலும் புதுவையிலும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×