search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து வருமான வரி சோதனை: தலைவர்கள் கருத்து
    X

    சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து வருமான வரி சோதனை: தலைவர்கள் கருத்து

    வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடத்தும் சோதனை பற்றி அரசியல் பிரபலங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்ப்போம்.
    சென்னை:

    வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுலவகத்தில் தொடங்கி கோடநாடு எஸ்டேட் வரை  இந்த சோதனைப் பட்டியல் நீள்கிறது.

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்த சோதனையில் அரசியல் பின்னணி இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி அரசியல் பிரபலங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்ப்போம்.

    அரசியல் உள்நோக்கத்திலேயே வருமானவரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்த சோதனையால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை என்றும் அ.தி.மு.க. அம்மா அணியின் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயா.டி.வியை கைப்பற்றவே சோதனை நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இரட்டை இலைக்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தம் இல்லை என்று முதல்வர் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தார். வருமான வரியை முறையாக செலுத்தாவிட்டால் சோதனை நடக்கத்தான் செய்யும் என்றும் அவர் கூறினார்.



    கருப்பு பண நடவடிக்கையாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்றால், சேகர் ரெட்டி மீதான நடவடிக்கையில் சுணக்கம் காட்டுவது ஏன்? என தினகரன் அணியின் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார். சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் அவர் வினவினார்.

    வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

    ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெறும் சோதனையில் எந்த அரசியல் பின்னணியும் கிடையாது என முதலமைச்சர் அணியின் ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறுகிறார்.
    Next Story
    ×