search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம்: தினகரன் வக்கீல் காசிநாதபாரதி
    X

    வருமான வரி சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம்: தினகரன் வக்கீல் காசிநாதபாரதி

    தமிழகம் முழுவதும் இன்று சசிகலா உறவினர்களின் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று தினகரனின் வக்கீல் காசிநாதபாரதி கூறினார்.
    சென்னை:

    வருமான வரித்துறை சோதனை தொடர்பாக தினகரனின் வக்கீல்  காசிநாதபாரதி கூறியதாவது:-

    வருமான வரித்துறை தனது கடமையை செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் எங்களுக்கு கிடையாது. விஷால் மத்திய அரசை விமர்சனம் செய்தவுடன் அவரது நிறுவனத்தில் சோதனை நடந்தது. மத்திய அரசுக்கு எதிராக செயல்படுகிறவர்களின் நிறுவனங்களில் எல்லாம் வருமான வரி சோதனை நடக்கிறது. இது சட்டத்துக்கு புறம்பானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பிறகு ஓரிரு வாரங்களிலேயே ஜனார்த்தன ரெட்டி என்பவர் 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தனது மகளின் திருமணத்தை நடத்தினார். அங்கே வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை.

    சேகர் ரெட்டி வீட்டில் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.50 கோடி அளவில் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டன. அங்கே இவர்கள் நடத்திய சோதனை என்ன?



    தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீட்டில் சோதனை செய்தால் கூட பரவாயில்லை. ஆனால் தலைமை செயலகத்தில் சோதனை செய்தது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக இவர்கள் தொடர்ந்து வருமான வரித்துறையை வைத்துக் கொண்டு தங்களது ஏவல் துறையின் மூலமாக தங்களுக்கு எதிராக அரசியல் செய்பவர்களுக்கு எதிராக அச்சுறுத்தலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கு எதிரானது.

    இன்று நடைபெறுகிற இந்த சோதனை என்பது, இதற்கு மேலும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டுமானால் சேகர் ரெட்டி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட போது, ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அதில் உச்சரிக்கப்பட்டது.

    ஆனால் அவரது வீட்டில் இன்று வரை சோதனை நடத்தப்படவில்லை. அவரிடம் இருக்கின்ற பல ஆயிரம் கோடி ரூபாய்க்காக வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. தங்களுக்கு சாமரம் வீசுகின்றவர்கள் வீட்டில் சோதனை நடத்தப்படாது. தங்களுக்கு எதிராக செயல்படுகிறவர்கள். வீட்டில் மட்டும் சோதனை நடத்துவது என்பது ஒட்டுமொத்தமாக இந்தியாவின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்படுகின்ற அறை கூவலாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

    ஜெயா டி.வி. என்பது அ.தி.மு.க.வின் டி.வி. கிடையாது. அ.தி.மு.க. சார்பான டி.வி. அதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நடத்தவில்லை. அதே போல் நமது எம்.ஜி.ஆர். என்பது அ.தி.மு.க. சார்பான பத்திரிகை. ஆனால் இந்த ஊடகங்களில் தங்களுக்கு சாமரம் வீசும் வேலையை செய்யவில்லை என்பதற்காக இதுபோல வருமான வரித்துறை சோதனை நடத்துவது சட்ட விரோதமானது. தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் நடந்த சோதனையில் இதுவரை எதை கண்டுபிடித்தார்கள்.

    அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வருமான வரித்துறை சுதந்திரமான அமைப்பு என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இப்படி தொடர்ந்து அச்சுறுத்துகின்ற விதத்திலே எங்கள் மீது நடவடிக்கை தொடருவதால் இந்த வருமான வரித்துறை மோடியின் பாடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.

    எங்களால் இவர்கள் மீது வழக்கு தொடர முடியும். பல கோடி ரூபாய்க்கு இவர்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர தயாராக இருக்கிறோம். சட்ட ரீதியாக இந்த சோதனையை நாங்கள் எதிர்கொள்வோம்.

    ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி அவரை செயல்படாமல் வைத்துள்ளனர். எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத திராணியற்றவர்கள் இது போன்ற சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் புரட்சித் தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள் எங்கள் மனசாட்சியை தவிர எதற்கும், எந்த வி‌ஷயத்துக்கும் அஞ்சமாட்டோம்.

    நாங்கள் ஓ.பன்னீர் செல்வத்தை போலவோ, எடப்பாடி பழனிசாமியை போலவோ யாரிடமும் அடிபணிவதற்கு தயாராக இல்லை. இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

    வருமான வரிசோதனை நடத்தி ஜெயா டி.வி.யையும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழையும் கைப்பற்ற முடியாது. இது வழிப்பறி கொள்ளைக்கு இணையானதாகும். வரி ஏய்ப்பு என்றால் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். வருமான வரித்துறை உடனடியாக ஒரு இடத்தில் சோதனை நடத்தி விட முடியாது. இதற்காக 500 போலீசாரை அழைத்து வந்து எங்களை அச்சுறுத்த முடியாது. 5000 போலீசார் வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்களும் உங்களுக்கு சாமரம் வீசுவோம் என்று நினைத்தால் அது பகல் கனவாகத்தான் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×