search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்: சென்னையில் உள்ள வீட்டில் உயிர் பிரிந்தது
    X

    தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்: சென்னையில் உள்ள வீட்டில் உயிர் பிரிந்தது

    பிரபல தமிழறிஞரும் எழுத்தாளருமான மா.நன்னன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94.
    சென்னை:

    தமிழகத்தின் தலை சிறந்த தமிழறிஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மா.நன்னன்.

    எழுத்தாளர், பேச்சாளர், தமிழறிஞர், பெரியார் பற்றாளர், தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கு சொல்லிக் கொடுத்தவர், புலவர், தனித் தமிழ் மீது தனியாக தாகம் கொண்டவர் என்று பல்வேறு சிறப்புகள் இவருக்கு உண்டு.

    கடந்த சில மாதங்களாக மா.நன்னன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் ஓய்வு பெற்று வந்தார்.

    இன்று அதிகாலை அவர் உடல் நலம் மோசமானது. 9 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்ற ஊரில் மாணிக்கம் - மீனாட்சி தம்பதியருக்கு 1924-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்று காரணமாக அவர் தனது பெயரை மா.நன்னன் என்று மாற்றிக் கொண்டார்.

    கல்லூரியில் படிக்கும் போதே வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தீவிரமாக கலந்து கொண்டார். ரெயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்ததற்காக சிறை சென்றார்.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் “புலவர்” பட்டம் பெற்ற அவர் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கினார். பிறகு உயர்நிலைப் பள்ளி, பயிற்சிப் பள்ளி, கலைக் கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் பணியாற்றினார். பிறகு 1980-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்தார்.

    வயது வந்தோர் கல்வி வாரியத்தின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழை எப்படி பேச வேண்டும் என்று இவர் இடைவிடாது கற்பித்து வந்தார்.


    சென்னை தொலைக்காட்சியில் இவர் “எண்ணும் எழுத்தும்” என்ற தலைப்பில் தமிழ் மொழியை கற்பித்தார். எதிரில் நிறைய பேர் இருப்பது போன்ற பாவனையில் அவர் ஏழை-எளிய மக்களுக்காக அவர் தமிழ் கற்பித்த விதம் உலகம் முழுவதும் புகழையும் வரவேற்பையும் பெற்றது.

    இதையடுத்து தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மூலம் இவர் தமிழ் கற்று கொடுத்த முறையை இங்கிலாந்து, மலேசியா தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்துள்ளன.

    உங்களுக்காக என்ற டி.வி. தொடரில் 60-க்கும் மேற்பட்ட குறுநாடகங்களை எழுதி நடிக்கவும் செய்துள்ளார். 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரியார், கருணாநிதி மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டிருந்தார்.

    பெரியார் கொள்கைகள் குறித்து இவர் எழுதிய புத்தகங்கள் வரவேற்பு பெற்றன. பெரியாரின் கோ‌ஷங்கள் என்ற இவரது புத்தகம் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
    Next Story
    ×