search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையை வெகுவாக நேசிக்கிறேன், நான் ராஜினாமா செய்யவில்லை: கவர்னர் கிரண்பேடி விளக்கம்
    X

    புதுவையை வெகுவாக நேசிக்கிறேன், நான் ராஜினாமா செய்யவில்லை: கவர்னர் கிரண்பேடி விளக்கம்

    புதுவையையும், இம்மக்களையும் வெகுவாக நேசிக்கிறேன், கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் மோதல் இருந்து வருகிறது.

    இதற்கிடையே வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்ட 7 எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க கவர்னர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பி இருந்த நிலையில் அதனை அவர் நிராகரித்தார். அந்த கோப்பை அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதன் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இது கவர்னர் கிரண்பேடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். தனது எதிர்ப்பை மீறி மத்திய உள்துறை அமைச்சகம் வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு வழங்கியதால் கவர்னர் கிரண்பேடி தனது பதவியை ராஜினாமா செய்ய டெல்லி சென்றதாக நேற்று தகவல் பரவியது. ஆனால், கவர்னர் கிரண்பேடி இதனை மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

    நான் ராஜினாமா செய்யவில்லை. அப்படி வந்த தகவல் புரளி, உண்மை இல்லை. நான் பதவி விலகியதாக யார் வதந்தி பரப்புகின்றனர் என்று தெரியவில்லை. நான் பதவி விலகவில்லை.

    புதுவையில் தலைமை செயலாளர் மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த மாற்றத்தால் புதுவைக்கு பலன் கிடைக்கும். நடுநிலையோடும், அனைத்து தரப்பினரின் கருத்தை கூர்ந்து கவனிக்கும், களப் பணியாற்றும், அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியவராகவும், நிலைமையை சிக்கல் ஆக்காதவராகவும் உள்ள தலைமை செயலாளரே புதுவைக்கு தேவை.

    புதுவைக்கு சிறந்த மாற்று தேவைப்படுகிறது. மக்களுக்கு அக்கறை, பொறுப்புடன் பதில் தரும் நேர்மையானவரே தேவை. நல்ல நாள் வர நான் பாடுபடுவேன்.

    கடவுளின் ஆசியால் புதுவை பாதுகாக்கப்படும். நான் புதுவையையும், மக்களையும் வெகுவாக நேசிக்கிறேன். நான் இங்கே அச்சமின்றி பணிபுரியவே உள்ளேன். எனக்கு இது சிறந்த ஆன்மீக தலம், வேத புரியாக உள்ளது.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×