search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் அருகே மையம் - இன்றும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிப்பு
    X

    காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் அருகே மையம் - இன்றும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிப்பு

    காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் அருகே மையம் கொண்டு இருப்பதால், கடலோர மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.

    வழக்கத்தை விட ஒரு வாரம் தாமதமாக பருவமழை தொடங்கினாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.



    இடைவிடாமல் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

    தேங்கிய தண்ணீர் வடியாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது.

    சென்னை மற்றும் புறநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேற்றும் பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கிவிட்டனர். தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரை மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். சுரங்க பாதைகளில் தேங்கிய தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-



    கடந்த வெள்ளிக்கிழமை தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, இன்று (அதாவது நேற்று) தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதி வரை பரவி இருக்கிறது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழை பதிவாகி உள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) மாலை கடல் பகுதியில் இருந்து நிலப்பரப்பிற்கு வந்ததால் அன்று இரவு அதிக மழை பெய்தது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் (இன்று) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யும். சில சமயங்களில் இடியுடன் பலத்த மழையாகவும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

    இதற்கிடையே மலேசிய தீபகற்பத்தையொட்டிய சியாம் வளைகுடா பகுதியில் உருவாகி தெற்கு அந்தமான் கடல் பகுதி வரை பரவி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை வருகிற 7-ந் தேதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அந்தமானில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் இந்த ஏரி கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. 23.5 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 21.4 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 23.3 அடியை எட்டும் போது பாதுகாப்பு கருதி உபரிநீர் கிளியாற்றில் திறந்து விடப்படும்.

    இதனால் அந்த ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள தோட்டநாவல், கத்திரிச்சேரி, முள்ளி, முன்னூற்றி குப்பம், கே.கே.நகர், தச்சூர் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக மதுராந்தகம் சப்-கலெக்டர் கிள்ளி சந்திரசேகர் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 27 செ.மீ. மழை பெய்து உள்ளது. திருப்பூண்டியில் 24 செ.மீ, வேதாரண்யத்தில் 16 செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., மயிலாடுதுறை, சீர் காழியில் தலா 11 செ.மீ. பொன்னேரி, 10 செ.மீ, பரங்கிப்பேட்டை, ஆணைக்காரன்சத்திரம், நாகப்பட்டினத்தில் தலா 9 செ.மீ மழையும் பெய்து இருக்கிறது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம், காரைக்கால், கடலூர், சென்னை நுங்கம்பாக்கம் தலா 7 செ.மீ, சென்னை விமான நிலையம், காட்டுமன்னார் கோவில், தாமரைப்பாக்கம், தரங்கம்பாடி, சென்னை டி.ஜி.பி. அலுவலகம் தலா 6 செ.மீ, மாமல்லபுரம், திருவாரூர், சிதம்பரம், நன்னிலம், விருத்தாசலம், மரக்காணம், செம்பரம்பாக்கம், முத்துப்பேட்டை, சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. 
    Next Story
    ×