search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது - விவசாயிகள் வேதனை
    X

    புதுவையில் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது - விவசாயிகள் வேதனை

    புதுவையில் நடவு செய்யப்பட்டுள்ள 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் புதுவையில் கடந்த 30-ந் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் அவ்வப்போது சிறு தூறல் மழை பெய்து வந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.

    இந்த தொடர் மழையினால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி உள்ள மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்களும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த தொடர் மழையினாலும், கடல் சீற்றத்தினாலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    புதுவையை அடுத்துள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே தந்திராயன் குப்பம், புதுக்குப்பம், சின்ன முதலியார் சாவடி, பெரிய முதலியார் சாவடி, பொம்மையார் பாளையம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் ஒரு விடுதியின் காம்பவுண்டு சுவர் முற்றிலும் இடிந்து சேதமானது.

    இந்த நிலையில் பலத்த மழை காரணமாக பாகூர் மேற்கு தெருவில் குப்பு, அமிர்தம் ஆகியோர் குடியிருந்த வீட்டின் சுவர் நேற்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் சம்பவ இடத்தை பார்வையிட்டு வீட்டு சுவர் இடிந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.

    தொடர் மழை காரணமாக புதுவையில் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் தற்போது சம்பா சாகுபடி பருவம். இதற்காக பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். 10 நாட்களாக நெற்பயிர் துளிர்விட்டுள்ளது.

    இந்த நிலையில் கரிக்கலாம்பாக்கம், அரங்கனூர், சேலியமேடு, ஆதிங்கப்பட்டு, ஏம்பலம், பாகூர் உள்ளிட்ட பகுதியில் நடவு செய்யப்பட்ட 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கிறது.

    வயல் வெளியில் தேங்கிய நீரை வெளியேற்ற முடியாததே இதற்கு காரணம். மழைநீர் வெளியேற வேண்டிய கால்வாய்கள் அடைத்து கிடக்கிறது.

    இந்த கால்வாய்களில் கோரை புல், ஆகாய தாமரை வளர்ந்து கிடப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது புதுவை விவசாயிகளிடையே சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×