search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளர் மனோஜ் பரிதா
    X
    தலைமை செயலாளர் மனோஜ் பரிதா

    புதுவையில் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது: மனோஜ் பரிதா

    புதுவை மாநிலத்தில் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது என பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை செயலாளர் மனோஜ் பரிதா கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது.

    கவர்னர், முதல்- அமைச்சர் மோதல் காரணமாக அரசு அதிகாரிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் கவர்னர் கிரண்பேடியையும், மற்றொரு தரப்பினர் முதல்-அமைச்சர் நாராயணசாமியையும் ஆதரித்து வருகின்றனர்.

    இதில், புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக இருந்தார். இதனால் தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவை கவர்னர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்தார்.

    ஆனால், இந்த விமர்சனங்களுக்கு தலைமை செயலாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் கவர்னரின் மிரட்டலுக்கு பணிந்து செயல்படவும் இல்லை. இதனால் தலைமை செயலாளரை மாற்றும்படி கவர்னர் கிரண்பேடி உள்துறை அமைச்சகத்துக்கு புகார் செய்திருந்தார்.

    இந்த நிலையில் தற்போது புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, நிதித்துறை செயலாளர் நரேந்திரகுமார் ஆகியோர் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கவர்னரின் புகாரின் பேரிலேயே தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை செயலாளர் மனோஜ் பரிதா மறுத்துள்ளார்.

    புதுவையில் 2 அரசியல் தலைமை இடையே போட்டி நிலவுவதால் பணி செய்ய முடியாத சூழல் உள்ளது. இதனால் நானே மாறுதல் கோரினேன் என்று தலைமை செயலாளர் மனோஜ் பரிதா பேட்டி அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுவாக தலைமைச் செயலாளர் பணிக்காலம் 2 ஆண்டுகள்தான். நான் இங்கு கூடுதலாகவே 6 மாதங்கள் பணிபுரிந்தேன்.

    புதுவையில் தற்போது இரண்டு அரசியல் தலைமைகளுக்கு இடையே உள்ள போட்டியால் பணி செய்ய முடியாத சூழல் நிலவுவதால் மாறுதல் கோரினேன். ஏனைய அரசு அதிகாரிகளும் சுதந்திரமாக பணி செய்ய முடியாத நிலை உள்ளது.

    எனக்கு டெல்லியில் நல்ல பணி கிடைக்கும். அமைதியான சூழலில் வேலை புரிய வேண்டும். பணியிட மாறுதல்களை மத்திய அரசின் உயர்மட்டக் குழு தான் முடிவு செய்யும். இதில் அரசியல் தலையீடு இருக்க வாய்ப்பில்லை.


    யாரும் எனக்கு ஆதரவு என்ற நிலை இல்லை. நான் சட்டப்படி இங்கு பணிபுரிந்தேன். நான் இந்த தரப்பை சேர்ந்தவன், அந்த தரப்பை சேர்ந்தவன் என்ற நிலைப்பாடு கிடையாது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சட்டப்படி பணிபுரிய வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. புதுவையில் நான் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் பணிபுரிந்தேன். பல்வேறு நல்ல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    புதுவைக்கு மீண்டும் விமான சேவை, கடற்கரையை மணல் பரப்பாக்கி சீரமைக்கும் திட்டம், காரைக்காலில் ஜிப்மர் மருத்துவ கிளை, துறைமுக மேம்பாடு என திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனக்கு தற்போது சிறந்த பணி டெல்லியில் ஒதுக்கப்படும். இந்த பணியிட மாறுதலில் யாருடைய தலையீடும் இல்லை.

    புதுவை சிறந்த பகுதியாக உள்ளது. சிறந்த மனிதர்கள், சிறந்த சுற்றுலா தலமாகும். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. நடு இரவில் கூட அச்சமின்றி செல்லும் நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கு, விவசாயத்துக்காக சிறப்பு விருதுகளும் தரப்பட்டு உள்ளன. ஆன்மீக தலமாகவும் உள்ளது. மதுபான கூடங்கள் அதிக அளவில் இருந்தாலும் இங்கு பெரிய பிரச்சனைகள் இல்லை.

    எனது பணியை திருப்திகரமாக செய்தேன். இதுபோன்ற அதிகார போட்டிகள் இல்லையென்றால் மேலும் செம்மையாக பணிபுரிந்திருக்கலாம். வளர்ச்சி ஆணையர் நரேந்திரகுமார் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக இளநிலை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. வழக்கு பதிவால் மாறுதல் இல்லை. நீதிமன்றத்தில் விசாரணை வந்தால் தான் கருத்து தெரிவிக்க முடியும்.

    இளநிலை அதிகாரியின் கீழ் மூத்த அதிகாரி நரேந்திரகுமார் எவ்வாறு வேலை செய்ய முடியும்? இதனால் பணி மாறுதலில் செல்வது உகந்ததுதான். புதிய தலைமை செயலாளர் விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கிறேன். என் மீது எந்த குறிப்பிட்ட புகாரும் இல்லை.

    இவ்வாறு மனோஜ் பரிதா கூறினார்.
    Next Story
    ×