search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான குழந்தைகள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான குழந்தைகள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

    கொடுங்கையூரில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் தண்ணீர் குளம்போல் தேங்கி இருந்தது. ராஜரத்தினம் தெருவில் மின்சார பெட்டியில் இருந்து புதைக்கப்படாமல் சென்ற மின் வயரில் மின்கசிவு ஏற்பட்டு தேங்கி இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. 

    இதனை அறியாமல் மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் பாவனா, யுவஸ்ரீ  என்ற இரு சிறுமிகள் நேற்று முன்தினம் மதியம் இறங்கினர். இதில் மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால் உயிர்பலி ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலிலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி வியாசர்பாடி செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் டெல்லி மற்றும் அப்பகுதி களப்பணியாளர்கள் 5 பேர் உள்பட மொத்தம் 8 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பலியான சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

    ஆனால் கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து தனி வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்த தமிழக அரசுக்கு கூடுதல் நிவாரணம் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    Next Story
    ×