search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் இருந்து சசிகலா வெளியில் சென்று திரும்பியது உண்மைதான்: டி.ஐ.ஜி. ரூபா
    X

    சிறையில் இருந்து சசிகலா வெளியில் சென்று திரும்பியது உண்மைதான்: டி.ஐ.ஜி. ரூபா

    சிறையில் இருந்து சசிகலா வெளியில் சென்று திரும்பியது உண்மைதான் என்று டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார்.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் வெளியில் ஷாப்பிங் சென்று விட்டு, கையில் பையுடன் சிறைக்கு திரும்பும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதை கண்டுபிடித்த சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    சிறையில் நடந்து வரும் விதி மீறல்களுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகவும் டி.ஜி.பி.க்கு ரூ.2 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டதாகவும், பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார்.

    இதுபற்றி கர்நாடக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு ஏதுவாக டி.ஐ.ஜி. ரூபா இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா தனியார் தொலைக் காட்சிக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்துள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் சிறையில் ஒரே அறையில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    சிறை விதிப்படி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தால்தான் வெளியில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுக்க அனுமதிக்கப்படும். ஆனால் சசிகலா, இளவரசி இருவரது உடல் நிலை நன்றாகத்தான் இருந்தது.

    அவர்கள் இருந்த அறையில் பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி எனக்கு புகார்கள் வந்ததின் பேரில் நான் சிறைக்குள் சென்று ஆய்வு செய்தேன். அப்போது பல்வேறு வசதிகள் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    சிறையின் பொறுப்பு அதிகாரி மற்றும் வார்டனுக்கு தெரியாமல் அங்கு எதுவும் செய்ய முடியாது எனவே இதற்கு பலர் உடந்தையாக இருந்துள்ளனர்.


    அதுமட்டுமல்ல சசிகலாவும், இளவரசியும் சுடிதார் அணிந்து பகல் நேரத்தில் வெளியில் ஷாப்பிங் சென்று விட்டு சிறைக்குள் திரும்பும் காட்சியும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதை வைத்து பார்க்கும் போது அவர்கள் வெளியிலும் தங்கி உள்ளனர் என்பது உண்மை என தெரியவந்தது.

    எனவே நான் விசாரணை நடத்தி அனைத்து விவரங்களையும் அரசுக்கு தெரிவித்தேன். உடனே சில நாட்களில் நான் இட மாற்றம் செய்யப்பட்டேன். அரசு ஊழியராக இருப்பவர்களுக்கு இட மாற்றம் வருவது சகஜம்தான். அதை ஏற்றுக் கொண்டேன்.

    சசிகலா சிறைக்கு வெளியே சென்று வந்தது பற்றி உயர்மட்ட கமிட்டி தனது விசாரணையை விசாரித்து முடித்து விட்டதாக தெரிய வருகிறது. ஆனாலும் கமிட்டி அறிக்கை அரசிடம் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அந்த அறிக்கை என்ன சொல்லப்போகிறது என்பதை அறிய நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.

    சசிகலாவுக்காக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கு மாறு என்னை யாரும் தொடர்பு கொண்டது கிடையாது. அதே போல் அவர்கள் மூலம் எனக்கு எந்த மிரட்டலும் வந்ததில்லை.

    இவ்வாறு டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

    Next Story
    ×