search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவ மழை தொடங்கியதால் மெட்ரோ தண்ணீர் சப்ளை அதிகரிப்பு
    X

    பருவ மழை தொடங்கியதால் மெட்ரோ தண்ணீர் சப்ளை அதிகரிப்பு

    தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகளவு கிடைத்ததால் தற்போது மெட்ரோ தண்ணீர் சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கடந்த 2 வருடமாக பருவ மழை சராசரி அளவு பெய்யாததால் தமிழகத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டது.

    ஏரி, குளங்கள் எல்லாம் வற்றிவிட்டதால் குடிநீர் பஞ்சம் உண்டானது. கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய 4 ஏரிகளும் வற்றிவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வீராணம் ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்ததால் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதனால் விவசாய நிலங்களில் இருந்தும் சிங்கராய புரம் குவாரியில் இருந்தும் தண்ணீர் எடுத்து வரப்பட்டு சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

    சென்னையின் நாள் ஒன்றின் குடிநீர் தேவை 830 மில்லியன் லிட்டராகும். ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டால் 430 மில்லியன் லிட்டராக குறைந்தது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க லாரிகள் மூலம் வினியோகிக்கப்பட்டன. விவசாய கிணறுகளில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினமும் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகளவு கிடைத்ததால் தற்போது தண்ணீர் சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சென்னையில் குடிநீர் தற்போது கடந்த மாதங்களை விட கூடுதலாக வினியோகிக்கப்படுகிறது. 470 மில்லியன் லிட்டர் தினமும் வழங்கப்பட்டு வந்த குடிநீர் இப்போது 520 மில்லியன் லிட்டராக மெட்ரோ குடிநீர் வாரியம் அதிகரித்துள்ளது.

    நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டரில் இருந்து 110 மில்லியன் லிட்டர் குடிநீர் இப்போது உற்பத்தி செய்யப்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையும் இப்போது தொடங்கி விட்டதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து வரும் அளவை பொறுத்து குடிநீர் சப்ளை அதிகரிக்கப்படும் என்று மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக ஒரு டி.எம்.சி. தண்ணீர் 4 ஏரிகளுக்கும் வந்துள்ளது. தென்மேற்கு பருவமழை 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதால் வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையும் பெய்ய தொடங்கி விட்டால் தண்ணீர் பிரச்சினை படிப்படியாக குறைந்து விடும். குடிநீர் வழங்கும் அளவு அதிகரிக்கப்படும்.

    தற்போதைய நிலவரப்படி நெமிலிச்சேரியில் இருந்து 110 மில்லியன் லிட்டர், மீஞ்சூரில் இருந்து 100 மில்லியன் லிட்டர், வீராணம் ஏரியில் இருந்து 85 மில்லியன் லிட்டர், திருவள்ளூர் விவசாய நிலத்தில் இருந்து 100 மில்லியன் லிட்டர், குவாரி மற்றும் 21 ஏரிகளில் இருந்து 125 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    வீராணம் ஏரியில் தற்போது நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அடுத்த 10 நாட்களில் தண்ணீர் வினியோகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×