search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்து வட்டிக்காக கடத்தி செல்லப்பட்ட விசைத்தறி தொழிலாளி ரவி.
    X
    கந்து வட்டிக்காக கடத்தி செல்லப்பட்ட விசைத்தறி தொழிலாளி ரவி.

    ஈரோட்டில் கந்து வட்டி கும்பலால் கடத்தப்பட்ட தொழிலாளி மீட்பு: கிட்னி ஆபரேசன் தடுத்து நிறுத்தம்

    ஈரோட்டில் கந்து வட்டி கும்பலால் கடத்தப்பட்ட விசைத்தறி தொழிலாளியின் ‘கிட்னி’யை எடுக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தி தொழிலாளியை மீட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரவி. விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 37) இவர் இன்று ஈரோடு மாவட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், கந்து வட்டிக்காக தன் கணவர் ரவியை கடத்தி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள வி.பி.எஸ்.லேக்ஷோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு அவரது கிட்னியை ஆபரேசன் மூலம் எடுக்க உள்ளதாகவும் ரவியின் மனைவி சம்பூர்ணம் கூறி உள்ளார்.

    இந்த ஆபரே‌ஷன் நாளை (புதன்கிழமை) நடக்க இருப்பதாகவும் சம்பூர்ணம் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் கூறி உள்ளார்.

    நாங்களே வறுமையில் வாழ்கிறோம். இந்த நிலையில் கந்து வட்டி பணத்துக்காக என் கணவரின் கிட்னியை எடுத்தால் அவரது உடல் நலம் பாதிக்க கூடும். ஆகவே நாளை நடக்கும் என் கணவரின் ‘கிட்னி’ எடுக்கும் ஆபரேசனை தடுத்து நிறுத்துங்கள் எனவும் ஈரோடு கலெக்டரிடம் சம்பூர்ணம் கதறியழுதபடி கூறினார்.

    அவரது வேண்டுகோளை உடனே ஏற்றுக்கொண்ட ஈரோடு கலெக்டர் பிரபாகர் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    “ஈரோட்டை சேர்ந்த தொழிலாளி ரவி என்பவரின் கிட்னி தான் ஆபரேசன் எர்ணாகுளம் ஆஸ்பத்திரியில் நாளை நடக்க இருப்பதாக தெரிகிறது. அதை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

    பிறகு ரவியின் மனைவி சம்பூர்ணத்தை ஈரோடு எஸ்.பி ஆபிசுக்கு போய் எஸ்.பி.யிடம் புகார் செய்யுங்கள் நானும் எஸ்.பி.யிடம் பேசுகிறேன் என்று கூறினார்.


    உடனே சம்பூர்ணம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்று எஸ்.பி. சிவக்குமாரிடம் மனு கொடுத்தார்.

    அவரும் எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு போனில் தகவல் கொடுத்து ஆபரே‌ஷனை தடுத்து நிறுத்துவதாக உறுதி கூறினார்.

    இதனையொட்டி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்ற எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆபரே‌ஷன் நடக்க இருந்த ஆஸ்பத்திரிக்கு தகவல் கூறினர். ஆஸ்பத்திரிக்கு கேரள போலீசார் விரைந்தனர். அங்கு கிட்னி ஆபரேசனுக்காக சேர்க்கப்பட்டிருந்த ஈரோடு தொழிலாளி ரவியை மீட்டனர்.

    இன்று மாலை எர்ணாகுளத்தில் இருந்து அவர் ஈரோட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்.

    புகார் கொடுத்த ஒருசில மணி நேரத்தில் கணவரை மீட்டு கொடுத்த ஈரோடு கலெக்டர் பிரபாகர், எஸ்.பி.சிவக்குமாருக்கு ரவியின் மனைவி சம்பூர்ணம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
    Next Story
    ×