search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 30 ஆயிரம் நிறுவனங்களுக்கு நோட்டீசு: சுகாதார துறை செயலாளர்

    டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தொழிற்சாலை, கடைகள், பள்ளிகள், உள்ளிட்ட 30 ஆயிரம் நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காய்ச்சலுக்கு இதுவரை 100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். மேலும் உயிர் பலியை தடுக்க தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்து தெளிக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்களுக்கு நோட்டீசு அனுப்பி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சல் பரவாமல் இருக்க அனைவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தாலே போதும்.

    பல வீடுகளில் மாடிகளில் உள்ள தண்ணீர் தொட்டியை சரிவர மூடாமல் வைப்பதால் நல்ல தண்ணீரிலும் கொசு உற்பத்தியாகி விடுகிறது.

    தண்ணீர் தேக்கி வைக்கும் இடத்தை முறையாக மூடி வைக்காமல் இருப்பது அல்லது கவனக்குறைவாக வெளியில் திறந்து விடும் போது தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தியாகி 500 மீட்டர் சுற்றளவுக்கு அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள்.



    காலி இடங்களில் குப்பைகளில் சேரும் பிளாஸ்டிக்கில் மழை நீர் தேங்குவது, கட்டிட பணி நடைபெறும் இடங்களில் தேங்கும் தண்ணீர், வீடுகளில் தண்ணீர் டிரம்புகளை முழுமையாக மூடாத காரணங்களால் கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகி விடுகிறது.

    மேலும் வீடுகளில் உள்ள பிரிட்ஜின் பின்பகுதியில் தேங்கும் தண்ணீர், பூந்தொட்டியில் தேங்கி நிற்கும் தண்ணீர், ஒர்க்ஷாப்களில் பழைய டயர்களில் தேங்கி கிடக்கும் தண்ணீர், கழிவு நீரை திறந்த வெளியில் விடுவது போன்ற பல்வேறு காரணங்களால் கொசு வளர்கிறது.

    இதை தடுக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்படுகிறது. ஆனாலும் அதையும் பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு நிலையங்கள், வீடுகளை கண்டறிந்து நோட்டீசு அனுப்பப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று கண்காணித்து கழிவுகள், குப்பைகளை சுத்தம் செய்யாத வளாகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்தும், நோட்டீசு கொடுத்தும் வருகின்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் இதுவரை 30 ஆயிரம் பேர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி - கல்லூரிகள், தொழிற்சாலைகள், ஒர்க்ஷாப், வீடுகள், அரசு நிலையங்கள், டாஸ்மாக் கடைகளும் இதில் அடங்கும். அபராதமாக மொத்தம் ரூ.3 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளையும் அருகில் உள்ள பகுதிகளையும் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×