search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி: கலெக்டர் வழங்கினார்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி: கலெக்டர் வழங்கினார்

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தா மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

    பெரம்பலூர்:

    தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டமான விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா(பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்), வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், முதன்மைக்கல்வி அலுவலர் அருள்மொழிதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் சாந்தா மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மாணவ மாணவிகள் தங்களது சிந்தனைத்திறனை வளர்த்துக்கொள்ளவும், மற்ற மாணவர்களுக்கு எந்த வகையிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்தவர்கள் அல்ல என்ற எண்ணத்தை உங்களிடையே விதைக்கும் வகையிலும் தமிழக அரசின் முத்தான திட்டங்களுள் முக்கியத்திட்டமான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படுகின்றது. 2016-17 ஆம் கல்வி ஆண்டிற்கு 5,692 மாணவ-மாணவிகளுக்கு ரூ.7,05,20,800 மதிப்பிலான விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படவுள்ளது.

    அதன் தொடக்கமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 43 பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வின் தொடக்கமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 பேர் வீதம் 86 மாணவ-மாணவிகளுக்கு தலா.ரூ.12,400 மதிப்பு வீதம் ரூ.10,66,400 மதிப்பிலான விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படுகின்றது. ஒரு காலத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பயில எண்ணற்ற பொருளாதார சிரமங்களை அவர்களது பெற்றோர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தமிழக அரசு மாணவ-மாணவிகளுக்கு எல்லா வகையிலான நலத் திட்டங்களும் எந்தவித தொய்வு மின்றி சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் 13 வகையான விலையில்லா திட்டங்களை வழங்கி வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×