search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி அணையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்
    X
    குமரி அணையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்

    குமரியில் மழை நீடிப்பு: அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 112.8 மி.மீ. மழை பதிவானது. திற்பரப்பு, புத்தன் அணை, முள்ளங்கினாவிளை, கோழிப்போர்விளை, அடையாமடை, சுருளோடு, ஆரல் வாய்மொழி, பூதப்பாண்டி, கொட்டாரம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    திருவட்டார், குலசேகரம் பகுதிகளில் இன்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. நாகர் கோவிலிலும் லேசான மழை தூறியது. திற்பரப்பு பகுதியில் பெய்துவரும் மழையினால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 20.60 அடியாக இருந்தது. அணைக்கு 1818 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 604 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 50.30 அடியை எட்டியது. அணைக்கு 1227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 279 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் இன்று காலை 7 அடியை எட்டியது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் விடப்பட்டுள்ளதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடி பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை- 65.1, பெருஞ்சாணி- 47.2, சிற்றாறு 1 - 85.6, சிற்றாறு 2 - 64.50, மாம்பழத்துறை அணை- 32, நிலப்பாறை - 11.6, இரணியல் - 11, ஆணைக்கிடங்கு- 9.2, குளச்சல்- 8.6, குருந்தன்கோடு - 11, திற்பரப்பு- 57.8, புத்தன் அணை- 46.8, முள்ளங்கினாவிளை- 48, கோழிப்போர்விளை- 25.2, அடையாமடை- 53, மயிலாடி- 6, பாலமோர் - 112.8, நாகர்கோவில்- 10.2, பூதப்பாண்டி- 19.2, சுருளோடு- 37.2, கன்னிமார் -32.6, ஆரல்வாய்மொழி - 5.4.
    Next Story
    ×