search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் உள்ள சண்முகா மருத்துவமனையில் மாநகராட்சி கமி‌ஷனர் சதீஷ் ஆய்வு மேற்கொண்ட காட்சி
    X
    சேலத்தில் உள்ள சண்முகா மருத்துவமனையில் மாநகராட்சி கமி‌ஷனர் சதீஷ் ஆய்வு மேற்கொண்ட காட்சி

    டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த சேலம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

    டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த சேலம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம் மாநகராட்சி ஆணையாளரால் விதிக்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி விட்டனர். ஏராளமானோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அமைந்துள்ள சண்முகா மருத்துவமனையில் இன்று காலை மாநகராட்சி கமி‌ஷனர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இவ்வாய்வின் போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் தேக்கி வைக்கக்கூடிய தண்ணீர் தொட்டிகள், உடைந்த மருத்தவ பொருட்கள் மற்றும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில், கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தண்ணீர் தொட்டிகளில் வி‌ஷத்தன்மை உடைய 3 அடி நீளம் உள்ள பாம்பு இருப்பதும், ஆணையாளரின் ஆய்வில் கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள், முறையாக அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வளாகங்களிலும், அருகில் உள்ள ஓடையிலும் கொட்டப்பட்டிருந்தது.

    இதன் மூலம் இந்த மருத்துவமனை நிர்வாகம் சுகாதார மேம்பாட்டிற்கு, குந்தகம் விளைவிப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யாத நிலையில், மருத்துவமனை நிர்வாகத்திற்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியினை தடுக்காததற்காக ரூ. 5 லட்சமும், அபாயகரமான மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டினை உருவாக்கியதற்காக ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 10 லட்சம் அபராதம் மாநகராட்சி ஆணையாளரால் விதிக்கப்பட்டது. மேலும் இம்மருத்துவமனைக்காக வழங்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்புகளும் உடனடியாக துண்டிக்கப்பட்டது. உரிய விதிகளின் படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×