search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்குன்றத்தில் ‘புளூவேல்’ விளையாடிய என்ஜினீயர் பலி
    X

    செங்குன்றத்தில் ‘புளூவேல்’ விளையாடிய என்ஜினீயர் பலி

    செங்குன்றத்தில் புளூவேல் விளையாட்டுக்கு என்ஜினீயர் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    உலகம் முழுவதும் ஆன்லைனில் விளையாடும் ‘புளுவேல்’ விளையாட்டுக்கு பள்ளி மாணவர்கள் உள்பட பலர் பலியானார்கள்.

    ஒவ்வொரு கட்டமாக விளையாடியபடி சென்றால் கடைசியில் தற்கொலை செய்து கொள்ள உத்தரவிடுவார்கள். அதற்கு மறுத்தால் உங்கள் ரகசியங்களை வெளியிடுவோம் என்று மிரட்டுவார்கள். இதனால் ஏற்படும் பயத்தில் தற்கொலை முடிவை எடுத்து உயிரிழந்தனர்.

    இந்தியாவிலும், பரவிய இந்த விளையாட்டுக்கு உயிரிழப்பு சம்பவம் நடந்தது. தமிழ்நாட்டில் மாணவர்கள் புளூவேல் விளையாட்டுக்கு இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து புளூவேல் விளையாட்டை செல்போன், இணையதளத்தில் விளையாடக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புளூவேல் விளையாட்டில் சிக்கிய மாணவர்கள், இளைஞர்களை மீட்டு கவுன்சிலிங் கொடுத்தனர். இதனால் புளூவேலுக்கு பலியாவது கடந்த சில நாட்களாக நின்றிருந்தது.

    இந்த நிலையில் செங்குன்றத்தில் புளூவேல் விளையாட்டுக்கு என்ஜினீயர் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றததை அடுத்த பழைய அலமாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் தினேஷ் (வயது 26). என்ஜினீயரான இவர் ஒரு ஆண்டுக்கு முன்பு மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

    தீபாவளி பண்டிகைக்காக கடந்த 9-ந்தேதி மும்பையில் இருந்து செங்குன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் செல்போனில் ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். இதுபற்றி பெற்றோர் கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை. மேலும் தினேஷ் சோகத்துடனேயே இருந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருநாவுக்கரசு கடைக்கு சென்ற மனைவியை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டிற்கு திரும்பிய திருநாவுக்கரசு கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் தினேஷ் புளுவேலை விளையாடியது தெரியவந்தது. இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    Next Story
    ×