search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல், சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறது: டாக்டர்கள் தகவல்
    X

    நடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல், சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறது: டாக்டர்கள் தகவல்

    தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நன்றாக செயல்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74), கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 10-ந் தேதி திடீரென்று அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் முகமது ரேலா, மருத்துவ சிகிச்சை பிரிவு இயக்குனர் டாக்டர் கே.இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர்.

    நடராஜனுக்கு, கல்லீரல் செயல்திறன் குறைந்ததை தொடர்ந்து, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சுவாச கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் மற்றும் இதர தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உடல் நிலையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் ஏற்படாததால், அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    புதுக்கோட்டையைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த வாலிபர் கார்த்திக்கின் குடும்பத்தினர் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்கள். இதனையடுத்து நடராஜனுக்கு கடந்த 4-ந்தேதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கல்லீரலும், சிறுநீரகமும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

    தொடர்ந்து அவருக்கு ‘டிரக்கியாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டு, தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து கணவர் நடராஜனை சந்தித்தார்.

    நடராஜனின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறியதாவது:-

    கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை முடிந்து நாளையுடன் (இன்று) 19 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நடராஜனுக்கு பொருத்தப்பட்டுள்ள கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் இயங்குகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவாக குணமடைந்து வருகிறார்.

    அவருக்கு, ‘டிரக்கியாஸ்டமி’ என்ற செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு அதன் மூலம் சுவாசித்து வருகிறார். இருந்தாலும் அவர் தகவல்களை நல்ல முறையில் பகிர்ந்துகொள்கிறார். தொடர்ந்து அவர் தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருடைய உடல்நிலை குறித்த மருத்துவ தகவல்கள் அவ்வப்போது அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    தற்போதும் தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நோய் தொற்று ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக யாரையும் பார்க்க அனுமதிப்பதில்லை. ஆனால் குடும்பத்தினருக்கு அவ்வப்போது 5 நிமிடம் மட்டும் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள். 
    Next Story
    ×