search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அட்டாரி நஞ்சன்
    X
    அட்டாரி நஞ்சன்

    ஊட்டி ம.தி.மு.க. செயலாளர் மீது தாக்குதல்: டி.எஸ்.பி.யிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

    ஊட்டி ம.தி.மு.க. செயலாளரை தாக்கிய டி.எஸ்.பி.யிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் அட்டாரி நஞ்சன். இவர் ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    நேற்று மதியம் தன்னை ஊட்டி ரூரல் டி.எஸ்.பி. சங்கு தாக்கியதாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது கையில் ரத்தக் காயம் இருந்தது.

    இது குறித்து மாவட்ட செயலாளர் அட்டாரி நஞ்சன் மகன் ரமேஷ் கூறும் போது, என் தந்தைக்கும், அவரது தம்பி மகன்களுக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய டி.எஸ்.பி. சங்கு எங்களை தரக்குறைவாக பேசினார். அதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவித்தோம்.

    இதில் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. என் தந்தையை பிடித்து கீழே தள்ளியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அதே வேகத்தில் அவரது கையை பிடித்து டி.எஸ்.பி. தாக்கினார். இதில் விரலில் ரத்த காயம் ஏற்பட்டது என்றார்.

    டி.எஸ்.பி. சங்கு கூறும் போது, நிலத்தகராறு காரணமாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட நிலத்திற்குள் நஞ்சன் தரப்பினர் நுழைய கூடாது என ஆர்.டி.ஓ. உத்தரவிட்டு உள்ளார்.

    ஆனால் அந்நிலத்தை அத்துமீறி குத்தகைக்கு விட முயற்சிப்பதாகவும், விவசாயம் செய்வதாகவும் அவரது தம்பி மகன்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

    இது தொடர்பான விசாரணையின் போது நஞ்சன் இருக்கையில் இருந்து தவறி விழுந்தார். தரையில் கையை ஊன்றியதால் அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் கிழித்து காயம் ஏற்பட்டது. அவரை நான் தாக்கவில்லை என்றார்.

    நஞ்சன் கொடுத்த புகாரின் பேரில் ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் டி.எ.ஸ்.பி. மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நஞ்சன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
    Next Story
    ×