search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.யை விமர்சிப்பது தேச துரோக குற்றமா?: சரத்குமார்
    X

    ஜி.எஸ்.டி.யை விமர்சிப்பது தேச துரோக குற்றமா?: சரத்குமார்

    மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதற்கு, திரைப்படத்துறை சார்ந்தவன் என்ற முறையில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “மெர்சல்” திரைப்படத்தின் சில காட்சிகள் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிப்பதாக இருப்பதால், அக்காட்சிகள் நீக்கப்படவேண்டும் என்று அரசியல் அழுத்தம் தரப்படுகிறது.

    இத்திரைப்படம் முற்றிலும் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான கதையம்சம் கொண்டதல்ல. வேறு கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே இவை விமர்சிக்கப்பட்டுள்ளன. இது தேசத்துரோக குற்றமாக தெரியவில்லை.

    ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை பா.ஜ.க.வின் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட நிர்வாகிகளும், பல பொருளாதார அறிஞர்களும், ஊடகங்களும், வணிக அமைப்புகளும், ஏற்றுமதியாளர்களும், பொது மக்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இப்படி விமர்சனம் செய்து வருபவர்களை நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும் என்று அரசு விரும்புகிறதா?

    முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத் தளங்களில் இத்திட்டங்கள் குறித்த கோடிக்கணக்கான மீம்ஸ்கள் போன்ற கருத்துப் பதிவுகள் வந்தவண்ணம் இருப்பது அரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் தெரியாதா? இவற்றின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    தணிக்கை குழு சான்று இத்திரைப்படத்தின் சர்ச்சைக்குரியதாகச் சொல்லப்படும் காட்சி, ஊடகங்களின் மூலம் திரைப்படம் பார்க்காத லட்சக்கணக்கானவர்களைச் சென்றடைந்து விட்டதே என்ன செய்யப் போகிறார்கள்?

    அது மட்டுமல்லாது தணிக்கை குழுவால் சான்றிதழே வழங்கப்பட்டு ஒரு திரைப்படம் வெளிவந்த பிறகு, அதை மீண்டும் மறு தணிக்கைக்கு உட்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

    அதுதவிர, ஜி.எஸ்.டி. பற்றி பல்வேறு தரப்பினர்களும் எதிர் கருத்து தெரிவித்து இருக்கும் போது, இது பற்றிய வசனங்கள் இடம் பெற்றிருப்பதில் தவறில்லை.

    முதலில் மத்திய அரசும், பா.ஜ.க.வும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தொய்வு நிலையைச் சீர்படுத்துவதில் கவனம் செலுத்தட்டும். விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளட்டும். எனவே, இதுபோன்ற எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத சிறுசிறு வி‌ஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதற்கு, திரைப்படத்துறை சார்ந்தவன் என்ற முறையில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×