search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
    X

    புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

    புதுச்சேரியில் நடைமுறைக்கு வந்த பேருந்து கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி, டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒவ்வொரு ஸ்டேஜூக்கும் ரூ.2 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    புறநகர் பஸ்களில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக 75 காசு வசூலிக்கப்பட்டது. இதேபோல விரைவு பஸ்கள், குளிர்சாதன பஸ்கள் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. இதன்படி 25 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்த கட்டண உயர்வுக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கட்டண உயர்வை எதிர்த்து நேற்றும், இன்றும் பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்தன.

    இதையடுத்து பஸ் கட்டண உயர்வை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதற்காக இன்று அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடனும் முதலமைச்சர் நாராயணசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்டண உயர்வு குறித்து மீண்டும் ஆய்வு செய்து அதன்பின்னர், பொதுமக்களை பாதிக்காத வகையில் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.


    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின், புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்படுகிறது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

    ‘மேலும், கட்டண உயர்வு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் புதிய கட்டணம் அறிவிக்கப்படும். அதுவரை, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பழைய கட்டணமே தொடரும்’ என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
    Next Story
    ×