search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பத்து மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
    X
    கோவில்பத்து மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

    சீர்காழி அருகே மது குடித்து வாலிபர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்

    சீர்காழி அருகே மது குடித்து வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே கோவில்பத்து கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (வயது 27), இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் புதுச்சேரி மாநில மதுபானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. அவர் வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு கூச்சலிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முத்துக்குமாரை சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் முத்துக்குமாரின் உடலை கிராமத்திற்கு கொண்டு சென்ற அப்பகுதி மக்கள் கோவில்பத்து மெயின் ரோட்டில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் பாலமுருகன், டி.எஸ்.பி சேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மதுகுறித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கோவில்பத்து உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மது பாட்டில்களை கொண்டு வந்து அந்த பாட்டில்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வோரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தாசில்தார் பாலமுருகன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சாராயம் விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இறந்தவருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததின் அடிப்படையில் சுமார் 3 மணி நேரம் நடந்த சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×