search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசில் புகார் கொடுத்ததால் பழிவாங்க மோட்டார் சைக்கிள்களை எரித்த கொள்ளையன் கைது
    X

    போலீசில் புகார் கொடுத்ததால் பழிவாங்க மோட்டார் சைக்கிள்களை எரித்த கொள்ளையன் கைது

    மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதை கண்டு குடியிருப்பில் உள்ளவர்கள் போலீசில் புகார் செய்தனர். அவர்களை பழி வாங்க அங்குள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், தாமோதரப் பெருமாள் கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் இரவு இங்கு தரை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதில் மொத்தம் 3 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவை போலீசார் ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பதும், ஒரு மோட்டார் சைக்கிளை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது.

    அவனது முகம் கைக்குட்டையால் மறைத்து கட்டப்பட்டு இருந்ததால் அடையாளம் கான்பதில் சிக்கல் ஏற்பட்டது. காமிராவில் பதிவான காட்சியை வைத்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அதே பகுதியில் 2 தெருக்கள் தள்ளி நிறுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    இந்த நிலையில் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவன் வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த விஷ்ணு என்கிற விக்கி என்பதும், அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து சென்றார் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவனை கைது செய்தனர். கைதான விஷ்ணு மீது வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன.

    அவன் போலீசாரிடம் கூறும் போது, நான் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதை கண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் போலீசில் புகார் செய்து வந்தனர். அவர்களை பழி வாங்க அங்குள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தேன் என்று கூறி இருக்கிறான்.
    Next Story
    ×