search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மாவட்ட நெரிசலை சமாளிக்க சென்ட்ரல்- மதுரை இடையே விரைவில் ஏ.சி. ரெயில்
    X

    தென்மாவட்ட நெரிசலை சமாளிக்க சென்ட்ரல்- மதுரை இடையே விரைவில் ஏ.சி. ரெயில்

    மதுரை மற்றும் நெல்லை பகுதிகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதை அறிந்து மதுரைக்கு சென்ட்ரலில் இருந்து ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் எப்போதும் நிரம்பி செல்கின்றன.

    எந்த ரெயில்களிலும் படுக்கை வசதி உடனே கிடைப்பது இல்லை. தட்கல் மற்றும் 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் மட்டுமே உறுதியான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

    சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக கூடுதலாக ரெயில்களை இயக்க இரட்டை ரெயில் பாதை பணி இன்னும் முழுமை அடையவில்லை.

    அதனால் ஒருசில ரெயில்கள் கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் மதுரை மற்றும் நெல்லை பகுதிகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதை அறிந்து மதுரைக்கு சென்ட்ரலில் இருந்து ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    இந்த புதிய ரெயில் அறிவிப்பு நவம்பர் 1-ந்தேதி வெளியிடப்படும். ரெயில்வே கால அட்டவணையில் இடம் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அதேபோல தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், திருநெல்வேலிக்கும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படும் 2 ரெயில்களும் 1-ந்தேதி முதல் முறைப்படி அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.

    எழும்பூரில் இருந்து ராஜஸ்தானுக்கு வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் ரெயில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு விடப்படுகிறது.

    ஏற்கனவே சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு வாரம் இருமுறை செல்லும் தூரந்தோ ரெயில் விடப்பட்டது. இந்த ரெயில் ஜோலார்பேட்டை, சேலத்தில் மட்டும் நின்று சென்றது. இந்த ரெயிலுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் அவை நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு விடப்படும் ஏ.சி. எக்ஸ்பிரஸ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து சென்ட்ரல் வரும் போது பெரம்பூரில் நிற்கும்.

    தென் மாவட்டங்களுக்கு தேவையான அளவு ரெயில் சேவை இல்லாததால் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய நிலை உள்ளது. அரசு பஸ்களும் பராமரிப்பு இல்லாமல் ஓடுவதால் அதில் பயணம் செய்ய மக்கள் தயங்குகிறார்கள்.

    புதிய பஸ்கள் விடப்பட்டால் தவிர அரசு விரைவு பஸ்களில் கூட்டம் நிரம்பாது.
    Next Story
    ×