search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தணிக்கை துறைக்கு எதிராக தான் பா.ஜனதா போராட வேண்டும்: திருமாவளவன்
    X

    தணிக்கை துறைக்கு எதிராக தான் பா.ஜனதா போராட வேண்டும்: திருமாவளவன்

    மெர்சல் பட விவகாரத்தில் தணிக்கை துறைக்கு எதிராக தான் பாரதிய ஜனதா போராட வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
    கோவை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சலின் தீவிரம் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் டெங்கு காய்ச்சல் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. மாநில அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடக்கத்தில் இருந்தே சுட்டி காட்டி வருகிறது. மத்திய அரசு மருத்துவ குழு ஒன்றைய தமிழகத்துக்கு அனுப்பியது. வழக்கம் போல மத்திய குழு வந்தது, பார்த்தது, சென்றது என்ற நிலைத்தான் உள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் டெங்குவை ஒழிக்க, அல்லது கட்டுப்படுத்த உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். தலித் உள்பட பார்ப்பன சமூகம் அல்லாத 36 பேரை கேரள அரசு அர்ச்சகராக நியமித்து இருப்பது இந்திய சமூக வரலாற்றில் மகத்தான புரட்சியாக அமைந்துள்ளது.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற குரல் முதலில் ஓங்கி ஒலித்த மாநிலம் தமிழகம். அதன் அடிப்படையில் ஒரு சட்டம் இயற்றிய மாநிலம் தமிழகம். அதன்படி அனைத்து சமூகங்களை சேர்ந்த 206 பேருக்கு ஆகம விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டும், இதுவரை பணிநியமனம் செய்யப்படாமல் காத்திருக்கிறார்கள்.


    எனவே தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரளாவை பின்பற்றி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும். இந்த சட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்ததால் அதை செய்ய வேண்டியது இல்லை என்று கருத வேண்டியதில்லை. இதை நடைமுறைப்படுத்தினால் தி.மு.க.வுக்கு பயன் என்று எண்ண வேண்டாம். இதை நடைமுறை படுத்துவதன் மூலம் இந்த அரசு பொதுமக்களிடம் மிகப்பெரிய நன் மதிப்பை பெறமுடியும். முதல்-அமைச்சரின் செல்வாக்கு மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. நாகை மாவட்டம் பொறையாறு பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலர் உயிர் இழந்தனர் என்பது வேதனை அளிக்கிறது.

    உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அரசு கட்டிடங்களின் உறுதிதன்மையை கண்டறிய ஒரு ஆய்வு குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    கேள்வி- கேரளாவில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை சாதியற்றவர்கள் என அறிவிக்க கேரள அரசு முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து?

    பதில்- சாதிய சமூகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை தேடி,தேடி படுகொலை செய்யும் அநாகரீக போக்கு இன்னும் நடைமுறையில் உள்ளது. எனவே சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையில் கேரள அரசு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை சாதியற்றவர்களாக அறிவிக்க போகிறோம் என்ற கேரள அரசின் முடிவு முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு மேலும் ஒரு மைலேஜ் தரக்கூடிய அறிவிப்பாக உள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் வரவேற்று பாராட்டுகிறது.

    கேள்வி- கமல்ஹாசன் நிலவேம்பு கசாயம் குறித்து கூறிய வார்த்தைகள் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இது குறித்து உங்கள் கருத்து?

    பதில்- ஏற்கனவே இது குறித்து சர்ச்சை எழுந்த போது, சிங் இன்ஸ்டிடியூட் என்ற ஆய்வகம் நிலவேம்பு கசாயத்தை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. நிலவேம்பு கசாயத்தை அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு என்ற ஒரு கசாயம் மட்டுமல்ல, அதனுடன் 9 வகையான மூலிகைகள் சேருவது. இது தமிழக அரசின் மருந்து கடைகளில் கிடைக்கிறது.

    கேள்வி- பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தாஜ்மகால் சிவன் கோவில் மீது கட்டப்பட்டுள்ள கல்லறை என்று கூறியிருக்கிறாரே?

    பதில்- பா.ஜனதா கட்சிக்கு நாட்டில் இருக்கிற பிரச்சனை பற்றி எந்த கவலையும் இல்லை. மிகவும் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு நாம் இருந்தோம். எப்படி வாழ்ந்தோம் என்பது பற்றி போதிய தரவுகள் நம்மிடம் இல்லை. புராணங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு பேசுவது பழமை வாய்ந்த கருத்து. இது பகுத்தறிவுக்கு முரணானது.

    கேள்வி- தி.மு.க. தலைவர் மீண்டும் முரசொலி அலுவலகத்துக்கு வந்து செயல்பட தொடங்கி இருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்- தி.மு.க. தலைவர் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர். அதிக வில்பவர் கொண்ட தலைவர். அதனால் தான் அவர் மீண்டும் பயணிக்க கூடிய அளவுக்கு தேறி இருக்கிறார். கோபாலபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை காரில் பயணித்து இருக்கிறார். இதன் மூலம் அவரது உடல்நிலை நன்று தேறி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.


    கேள்வி- மெர்சல் படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். படத்தில் இடம் பெற்ற வசனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்- படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் படம் சென்சார் போர்டுக்கு போய் உரிய தணிக்கைகள் செய்யப்பட்டு தான் வெளிவந்து இருக்கிறது. எனவே சென்சார் போர்டு என்கிற தணிக்கை துறைக்கு எதிராகத்தான் இவர்கள் போராட வேண்டும். படத்துக்கு எதிராக அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×