search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘டெங்கு’ நோய் பரவ காரணமான வீடுகள் - கடைகள், பள்ளிகளுக்கு அபராதம்: தமிழக அரசு நடவடிக்கை
    X

    ‘டெங்கு’ நோய் பரவ காரணமான வீடுகள் - கடைகள், பள்ளிகளுக்கு அபராதம்: தமிழக அரசு நடவடிக்கை

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக வீடுகள் - கடைகள், பள்ளிகளுக்கு அபராதம் விதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். இதையடுத்து டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சுற்றுப்புறங்களை சுகாதாரம் இல்லாமல் வைத்திருந்து டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் முதல் சுகாதாரமற்ற நிறுவனங்கள் மற்றும் வீடுகளை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இந்த நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமல்லாது சுகாதாரமற்ற பள்ளிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதாக கடைகள், நிறுவனங்கள், வீடுகள் என 3 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினர்.

    அதன்பிறகும் கொசுக்கள் உற்பத்தியாகும் கழிவுகளை அகற்றாததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்தும் இதே நிலை நீடித்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே நவோதயா பள்ளியைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும், சின்னவேப்பனம் அருகே நே‌ஷனல் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 4 குழந்தைகளுக்கும் டெங்கு பாதிப்பு இருந்தது.

    இந்த பாதிப்பு ஏற்பட்ட பிறகும் அந்த பள்ளிகளில் சுகாதார பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பள்ளியை சுற்றி தேங்கி இருந்த தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. இதனால் அந்த 2 பள்ளிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் பள்ளிகளின் சுகாதாரச் சான்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்த பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை சட்டத்தின்படி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது மட்டுமல்லாது நூலகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட நூலகத்தில் சுகாதார மற்ற நிலையில் பொருட்கள் இருப்பதையும் அதிகாரிகள் ஆய்வின்போது கண்டறிந்தனர். அங்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்ததால் அந்த நூலகத்திற்கு ரூ.1000 அபராதம் விதித்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

    தஞ்சை பழைய ராமேஸ்வரம் ரோடு பகுதியில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தபோது பசுபதி என்பவர் வீட்டில் பழைய டயர்கள் இருப்பதை கண்டறிந்தார். அதனால் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    அந்த பகுதியில் கிரானைட் நிறுவன உரிமையாளர் திர்காஸ் நேத்தாவின் வீட்டிலும், கடையிலும் ஆய்வு செய்த போது கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேடு இருப்பது தெரியவந்தது. அவரது கடைக்கு ரூ.5 ஆயிரமும், வீட்டிற்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    அந்த பகுதியில் உள்ள பழைய பஞ்சர் கடையில் ஆய்வு செய்த போது டயர்களில் தண்ணீர் தேங்கி இருப்பது தெரியவந்தது. அதன் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதித்தார்.

    பின்னர் ரெட்டி பாளையம் சென்ற கலெக்டர் அங்கு புதுத்தெரு பகுதியில் ஆய்வு செய்தார். அங்கு 2 வீடுகளுக்கு ரூ.100 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    நெல்லை என்.ஜி.ஓ காலனியில் ஒரு கட்டிட உரிமையாளரின் வீட்டு தண்ணீர் தொட்டியில் ஏராளமான கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டதால் அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பாளையங்கோட்டையில் ஒரு கட்டிட உரிமையாளருக்கும், செந்தில் நகரில் ஒரு உணவு விடுதி உரிமையாளருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    கடலூர் கம்மியம்பேட்டை, சுப்பராயலு நகர் பகுதிகளில் உள்ள டயர் விற்பனை செய்யும் கடை, பஞ்சர் ஒட்டும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 8 கடைகளில் இருந்த டயர்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் டெங்கு கொசுக்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 8 கடையின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடையில் இருந்த 4 டன் டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 வர்த்தக நிறுவனங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து ரூ.38 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    ராணிப்பேட்டை 21-வது வார்டில் ஸ்ரீராமின் புதிய கட்டிடத்தில் உள்ள செப்டிக் டேங்கில் மூடியில்லாமல் இருந்ததால் டெங்கு கொசு உருவாக வாய்ப்புள்ளதால் கட்டிட உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    வாலாஜா நகராட்சி சார்பாக கட்டப்பட்ட மேற்கூரையில் மழை நீர் தேங்கி பாசி ஏற்பட்டு டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளதால் அந்த கட்டிட காண்டிராக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கோவையில் உள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள், வீடுகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்ததாக 1000 வீடுகள், 2 ஆயிரம் நிறுவனங்கள் என மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரையும், நிறுவனங்களுக்கு ரூ. 1000 முதல் ரூ.5000 வரையும் என மொத்தம் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு, கடை, காலிமனை உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்து ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் 987 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. காரைக்குடியில் சுகாதாரமற்ற வீடு, கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரியத்தில் இன்று மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். அப்போது 3 கட்டிடங்களில் இருந்த தொட்டிகளில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கி தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    Next Story
    ×