search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டு நாளில் 2 அடி குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டு நாளில் 2 அடி குறைந்தது

    இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.05 அடியாக குறைந்தது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேட்டூர் :

    கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

    இதையடுத்து இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதேபோல் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கன மழை பெய்ததால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஒகேனக்கல் அருவிகளில் பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி யது. வெள்ளம் காரணமாக அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. அதிகபட்சமாக காவிரி ஆற்றில் 46 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென்று உயர்ந்தது.

    2 மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை இல்லாததால் தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது

    இதனால் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு 15 ஆயிரத்து 677 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று 8 ஆயிரத்து 554 கன அடியாக குறைந்தது. இன்று மேலும் சரிந்து 5 ஆயிரத்து 799 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று முன்தினம் 97.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 97.05 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் 96.05 அடியாக குறைந்தது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் வரத்தைவிட நீர்திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் நேற்று முன்தினம் முதல் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று தீபாவளி என்பதால் தமிழகம் மட்டும் அல்லாது கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
    Next Story
    ×