search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 799 கன அடியாக சரிந்தது
    X

    கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 799 கன அடியாக சரிந்தது

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 799 கன அடியாக சரிந்தது.
    ஓசூர் :

    கர்நாடக மாநிலம் நந்திகில்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதேபோல் பெங்களூரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த 16-ந் தேதி எப்போதும் இல்லாத அளவிற்கு 4 ஆயிரத்து 640 கன அடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால் அணை வேகமாக நிரம்பியது.

    இதையடுத்து அணையில் இருந்து பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் நேற்று முன்தினம் முதல் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 842 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை ஆயிரத்து 623 கன அடியாக குறைந்தது.

    இதையடுத்து அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 760 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள பாந்த கோட்டா தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×