search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் சட்டப்படி செல்லும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் சட்டப்படி செல்லும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

    வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் சட்டப்படி செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    என் மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து என் மனைவியை மீட்டு தாருங்கள் என்று காதல் திருமணம் செய்து கொண்ட கணவன், ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்த போது, மனைவி என்று மனுதாரர் கூறும் பெண் கோர்ட்டில் ஆஜராகி, மனுதாரரை யார் என்றே தெரியாது. தனக்கும் அவருக்கும் திருமணமே நடக்கவில்லை என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள் தீவிரமாக விசாரித்தபோது, மனுதாரரும், அந்த பெண்ணும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு சென்னையில் உள்ள வக்கீல் ஒருவரது அலுவலகத்தில் வைத்து திருமணம் நடந்ததாகவும் அந்த வக்கீல் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், வட சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சில வக்கீல்கள் பதிவு திருமணத்தை நடத்தி வைப்பதே முழு நேரத் தொழிலாக வைத்துள்ளனர். அதுவும் ஒரு வக்கீல் காதலர் தினத்தன்று 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ், அந்த வக்கீல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். வக்கீல் தொழில் என்பது புனிதமான தொழில். அதில் இருப்பவர்கள் புரோகிதர் தொழிலை செய்யக்கூடாது.

    வக்கீல் அலுவலகத்தில் ஏமாற்றி தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று புகார் வந்தால் அந்த வக்கீல்கள் மீது பார் கவுன்சில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் வக்கீல் அலுவலகத்தில் நடைபெறும் திருமணம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது தான் என்று ஐகோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

    வக்கீல் அலுவலகத்தில் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார். அதை வைத்து குமார் என்பவருடன் எனக்கு பதிவு திருமணம் நடந்துள்ளதாக ஆவணங்கள் தயாரித்துள்ளனர். இந்த திருமணத்தை ரத்து செய்தும், இந்த திருமணம் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு இளம்பெண் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, வக்கீல் அலுவலகத்தில் வைத்து தனக்கு தன் விருப்படிதான் திருமணம் நடந்தது என்று ஒப்புக்கொண்டதால், அவரது வழக்கை முடித்து வைத்து குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது எதிர் மனுதாரர் கணவன் சார்பில் ஆஜரான வக்கீல் பி.ஆனந்தன், இந்து திருமணச் சட்டத்தின் படி 2 நபர்கள் முன்பு ஒரு ஆணும், பெண்ணும் பாரம்பரிய அடிப்படையில் திருமணம் செய்து கொண்டால் அது செல்லும். அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிறராக இருக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. அந்த பிறரில் வக்கீல்கள் வருவார்கள். அப்படியிக்கும் போது வக்கீல் முன்பு நடைபெறும் திருமணம் செல்லாது என்று மனுதாரர் தரப்பில் செய்யப்படும் வாதங்களை ஏற்க கூடாது என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் வக்கீல் அலுவலகத்தில் மனுதாரருக்கும், எதிர்மனுதாரருக்கும் திருமணம் நடந்துள்ளது. பின்னர் அதனடிப்படையில் பதிவு திருமணம் நடந்துள்ளது. தற்போது மனுதாரர் இந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் கீழ் கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணையில், இதற்கு நேர் எதிரான கருத்தை கூறியுள்ளார்.

    எனவே இவரது மேல் முறையீடு வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அதே நேரம், திருமணம் நடந்தது தொடர்பாக வக்கீல் கொடுத்த கடிதம் இந்து திருமணம் சட்டத்தின் படி செல்லும் என்று உத்தரவிட்டனர்.

    Next Story
    ×