search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்: இன்று 3 பேர் உயிர்ப்பலி
    X

    தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்: இன்று 3 பேர் உயிர்ப்பலி

    தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில், இன்று மருத்துவமனையில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 மாதமாக டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு பாதிப்புக்கு 40 பேர் பலியானதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக அரசியல் கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்குப் பின்பே டெங்கு பாதிப்பா என்பது தெரிய வரும். எனவே காய்ச்சல் இருந்தால் உடனே ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

    நல்ல தண்ணீரில் கூட உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் டெங்கு உருவாவதால் தமிழ்நாடு முழுவதும் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை நகரில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்திய மருத்துவமுறை பாரம்பரிய மருந்தான நிலவேம்பு குடிநீர் அனைத்து மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அம்மா உணவகங்களிலும், மருத்துவ முகாம்களிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பகுப்பாய்வு கூடங்களிலிருந்து காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு உடன் உரிய மண்டல சுகாதாரத் துறை மூலமாக கொசுத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சம்மந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சுகாதாரப் பணியாளர்கள் வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் கொசுப்புழு வளரிடங்களான மேல்நிலை- கீழ் நிலை தொட்டி, கிணறு ஆகியவற்றில் கொசுப் புழுக்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர். தேவையற்ற பொருட்களான டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு, கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள், மக்கள் பெருவாரியாக கூடும் இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, நிலவேம்பு குடிநீர், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு சுகாதார தூதர் விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டு, சுகாதார தூதர்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

    தமிழக அரசு ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு காய்ச்சல் தடுப்பு தினமாக அறிவித்து உள்ளது. அனைத்து மண்டலங்களிலும் உள்ள 200 கோட்டங்களிலும் சுகாதாரத் துறையுடன் மாநகராட்சியின் மற்ற துறைகளான துப்புரவுத் துறை, பொறியியல் துறை மற்றும் தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து பல்வேறு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    புதிதாக வடிவமைக்கப்பட்ட கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பாக இருக்கும் முக்கியமான தேவையற்ற பொருட்கள் மற்றும் கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு ஏதுவாக இருக்கும் வீட்டமைப்புகள் பற்றி வண்ணப்படங்களுடன் கூடிய விளக்கத்துடன் உள்ள ஒரு லட்சம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அச்சிடப்பட்டு, மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவால் திரையரங்குகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், அம்மா உணவகங்கள் மற்ற வணிக நிறுவனங்கள், தொழிற் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், பூங்காக்கள், குடிசைப் பகுதிகள், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கடந்த வியாழன் முதல் ஒரு வாரத்திற்குள் ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தீவிர கொசு ஒழிப்பு பணியில் 2562 மலேரியா பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மலேரியா பணியாளர்களை கொண்டு 1,22,320 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 582 வீடுகளில் உள்ள கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டன. 223 கொசு மருந்து அடிக்கும் கைத்தெளிப்பான்களும், 189 கையினால் புகை பரப்பும் இயந்திரங்களும், 21 வாகனம் மூலம் புகை பரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் சம்மந்தமாக விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக 152 இடங்களில் கொசுப்புழுக்கள் உருவாகும் விதங்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து கண்காட்சி அமைத்து விளக்கப்பட்டது. 173 அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்யப்பட்டு, கொசுப்புழு இருந்த கட்டிடங்களில், கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு நீடித்து வருகிறது. தஞ்சாவூர் ஊமத்தநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு இருப்பது தெரிந்தது.

    சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சில் ஜெயராணியை அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே செய்யாறு ரோட்டில் உள்ள லாடப்பாடி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவரின் 2 வயது பெண் குழந்தை சாதனா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சாதனா இன்று அதிகாலை இறந்தாள்.

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூரை சேர்ந்த ஜேசுராஜ் மனைவி சண்முகசுந்தரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். பலியான சண்முகசுந்தரிக்கு 6 மாத குழந்தை உள்ளது.
    Next Story
    ×