search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளுப்பேரனை கொஞ்சி விளையாடிய கருணாநிதி
    X

    கொள்ளுப்பேரனை கொஞ்சி விளையாடிய கருணாநிதி

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது கொள்ளு பேரனுடன் மகிழ்ச்சியாக விளையாடும் வீடியோ பதிவு இப்போது ‘வைரலாக’ பரவி வருகிறது.
    சென்னை:

    உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் தேறி வருகிறது.

    கோபாலபுரம் வீட்டில் முதல் மாடியில் இருக்கும் கருணாநிதி எப்போதும் போல் காலையிலேயே எழுந்து விடுகிறார். அவரை தனி உதவியாளர் நித்யா தயார்படுத்தி புது உடை அணிவித்து இருக்கையில் அமர வைக்கிறார்.

    சளித்தொந்தரவில் இருந்து விடுபட, கருணாநிதிக்கு தொண்டையில் ‘டியூப்’ மாட்டப்பட்டுள்ளதால் திரவ உணவுகள் கொடுக்கப்படுகிறது. அவரை தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் சென்று பார்க்கிறார்கள்.

    மகள் செல்வி கருணாநிதியை அருகில் இருந்து கவனித்து கொள்கிறார். மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, மகள் கனிமொழி மற்றும் உறவினர்கள் தினமும் சென்று பார்த்து பேசுகிறார்கள். ‘ஜோக்’ அடிக்கும் போது கருணாநிதியும் சிரிக்கிறார். டி.வி. பார்க்கிறார். முரசொலி பத்திரிகையையும் படிக்கிறார்.

    நெருங்கிய உறவினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பார்க்க சென்றால் அவர்களை உடனே அடையாளம் கண்டு கொள்கிறார். சிரிக்கிறார். மற்றவர்களாக இருந்தால் உடனே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

    கடந்த வாரம் தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்தார். அப்போது அனைவரையும் அடையாளம் கண்டு கொண்ட கருணாநிதி உறுப்பினர் படிவத்தில் சரியான இடத்தில் கட்டத்துக்குள் கையெழுத்தை போட்டு அனைவரையும் வியக்க வைத்தார்.

    இந்த நிலையில் கருணாநிதி. தனது கொள்ளு பேரனுடன் மகிழ்ச்சியாக விளையாடும் வீடியோ பதிவும் இப்போது ‘வைரலாக’ பரவி வருகிறது.

    அதில் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு, தனது பேரனான நடிகர் அருள்நிதியின் மகன் மகிழனை கையில் தூக்கி வைத்துக் கொண்டு கருணாநிதியை முத்தமிட வைக்கிறார்.

    கருணாநிதியின் முகத்திலும், தலையிலும் அந்த கொள்ளுப்பேரன் முத்தமிடுகிறான். தலையால் இடிக்கிறான். அப்போது கருணாநிதி கொள்ளு பேரனின் விளையாட்டை ரசித்து சிரிக்கிறார். கையை நீட்டி கொள்ளு பேரனை தொடுகிறார்.

    அப்போது மு.க.தமிழரசு, கருணாநிதியின் முகத்தையும், தலையையும் தடவி கொடுத்து சிரிக்கிறார். மகள் செல்வியும் கருணாநிதியிடம் பேசி சிரிக்கிறார். தயாளு அம்மாள் அருகில் இருந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

    கருணாநிதியின் கொள்ளு பேரன் மகிழனுக்கு வருகிற 25-ந்தேதி 1-வது பிறந்த நாள் வருகிறது. இதே பேரனை மு.க.ஸ்டாலினும் தூக்கி வைத்து கொண்டு கருணாநிதியுடன் விளையாடும் வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
    Next Story
    ×