search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரும் ஆண்டு முதல் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தூள் தூளாக்குவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    வரும் ஆண்டு முதல் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தூள் தூளாக்குவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

    நீட் தேர்வை வரும் ஆண்டு தமிழக மாணவர்கள் தூள் தூளாக்குவர். இதற்காக 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    மொடக்குறிச்சி:

    அரச்சலூர் அடுத்த பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் அறிவியல் ஆய்வகம் திறப்பு விழா, புதிய கலையரங்கம் திறப்பு விழா, மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ வி.பி. சிவசுப்பிரமணி தலைமை தாங்கினார். ஈரோடு எம்.பி. செல்லக்குமாரசின்னையன் முன்னிலை வகித்தார். நவரசம் பள்ளி தலைவர் எஸ்.சி.துரைசாமி விழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

    விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ரூ.20 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் “அடல் டிங்கரிங் லேப்” எனும் நவீன அறிவியல் ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு புதிய கலையரங்கத்தை துவக்கி வைத்தார். ஈரோ டு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி. ராமலிங்கம் மாணவர் மன்றத்தை துவக்கி வைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும் போது கூறியதாவது:-

    இந்த பள்ளியில் திறக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அடல் அறிவியல் ஆய்வகம் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தேவையான சர்க்யூட்களை எளிதில் உருவாக்க முடியும். பெரிய விஞ்ஞானிகள் பயன்படுத்தும் புதிய கண்டுபிடிப்புக்கான நவீன முறைகளை எளிதில் பயன்படுத்தி உருவாக்க முடியும்.

    இதனால் எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழக மாணவர்களை யாரும் வெல்ல முடியாத நிலை உருவாகும். அதேபோல் சிறந்த புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம்.

    தமிழ் பண்பாடு, கலாசாரம், தொன்மை மாறாமல் சிறந்த பாடத்திட்டம் அமையும். நீட் தேர்வை வரும் ஆண்டு தமிழக மாணவர்கள் தூள் தூளாக்குவர். இதற்காக 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தற்போது தனியார் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தான் தனியார் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் தொடங்க அனுமதி அளித்தார். தற்போது அனைவரும் எந்தக் கல்வியும் கற்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

    மேலும் படிப்புடன் பொது அறிவையும் வளர்த்து கொண்டால் மட்டுமே சிறந்த வேலைக்கு செல்ல முடியும். எனவே மாணவர்கள் பொது அறிவை வளர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×