search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா விவகாரம்: சபாநாயகரின் நடவடிக்கையில் பாரபட்சம் இல்லை - ஐகோர்ட்டில் அரசு பதில் மனு
    X

    குட்கா விவகாரம்: சபாநாயகரின் நடவடிக்கையில் பாரபட்சம் இல்லை - ஐகோர்ட்டில் அரசு பதில் மனு

    சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை பாரபட்சமானது அல்ல என்று ஐகோர்ட்டில் சட்டசபை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தாராளமாக கிடைப்பதாக கூறி, சட்டசபைக்குள் அவற்றை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில், மு.க.ஸ்.டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக கவர்னரிடம், தி.மு.க. சார்பில் மனு கொடுத்தோம். இதையடுத்து, எங்கள் மீது நடவடிக்கை எடுத்து, சட்டசபைக்குள் வரவிடாமல் தடுத்து, குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, புகையிலை பொருட்களை அவைக்குள் கொண்டுசென்ற பல நாட்களுக்கு பின்னர், இப்போது நடவடிக்கை எடுக்கின்றனர்‘ என்று கூறியிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, உரிமைக்குழு அனுப்பிய விளக்க நோட்டீசின் அடிப்படையில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதித்தது. மேலும், இந்த வழக்கிற்கு பதிலளிக்க சபாநாயகர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கிற்கு தமிழக சட்டசபை செயலாளர் கே.பூபதி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டசபைக்குள் பகிரங்கமாக மனுதாரர்கள் கொண்டு வந்தனர். ஒருவேளை இந்த பொருட்களை சபைக்குள் கொண்டுவர அவர்கள் விரும்பினால், சபாநாயகரிடம் முன் அனுமதி பெற்றிருக்கலாம். இதை அவர்கள் செய்யவில்லை.

    அதுவும் சபாநாயகர் பலமுறை எச்சரிக்கை செய்தும், அதை மீறி அவர்கள் செயல்பட்டனர். இதனால், மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் பரிந்துரை செய்தார். சபாநாயகரின் இந்த செயல் பாரபட்சமானது கிடையாது. அவர் சட்டப்படி தான் செயல்பட்டுள்ளார்.

    விளக்க நோட்டீசை பெற்றுக்கொண்ட மனுதாரர்கள், அதற்கு பதிலளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 5-ந் தேதி சபாநாயகரிடம் முறையிட்டனர். சபாநாயகரும் 15 நாட்கள் காலஅவகாசத்தை அவர்களுக்கு வழங்கினார். அதன்பின்னர், மனுதாரர்கள் விளக்கம் அளிக்காமல், அவசர அவசரமாக இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    மனுதாரர்களுக்கு எதிராக சபாநாயகர் இறுதி நடவடிக்கை எடுக்கவில்லை. மனுதாரர்களின் செயலுக்காக அவர்களிடம் விளக்கம் கேட்டு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்த பின்னர், அதனை பரிசீலனை செய்து உரிமைக்குழு அறிக்கை அனுப்பும். அதன் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார்.

    தற்போது மனுதாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது ஆரம்பக்கட்ட நடவடிக்கைத்தான். இவ்வாறு நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசியல் சட்டத்தின்படியும், சட்டசபை விதிகளின் படியும் முழு அதிகாரம் உள்ளது.

    மேலும் அரசின் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க, மனுதாரர்கள் மீது உரிமைக்குழு மூலம் நடவடிக்கை எடுத்து, அவர்களை அவைக்குள் வரவிடாமல் தடுப்பதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. எனவே, அவர்கள் மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×