search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி: 5 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த பக்தர் - மீட்கும் பணி தீவிரம்
    X

    திருச்சி: 5 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த பக்தர் - மீட்கும் பணி தீவிரம்

    முசிடி அருகே உள்ள தலைமலை கோவிலில் கிரிவலம் சுற்றும் போது 5 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த நபரை தேடும் பணியில் தீயணைப்பு, காவல் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த நீலியாம்பட்டி கிராமத்தில் தலைமலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில், தரையில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் நல்லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    தலைமலை பெருமாளை வணங்க செல்லும் பக்தர்கள் கோவிலைச் சுற்றி சுமார் 2 அங்குலமே உள்ள விளிம்பில் கிரிவலம் செல்வார்கள். அதை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். கிரிவலம் செல்லும்போது ஆயிரக்கணக்கான அடி உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்நிலையில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அப்போது மலை உச்சிக்கு சென்று பெருமாளை வழிபட்ட ஆறுமுகம் (வயது 38) என்பவர் இரண்டு முறை கிரிவலம் சுற்றி விட்டு, மூன்றாவது முறையாக கிரிவலம் சுற்றும்போது தவறி கீழே விழுந்தார். இதனைக்கண்ட மற்ற பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் அந்த பக்தர் கிரிவலம் சுற்றி வரும்போது, கீழே விழும் காட்சியை அருகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

    சம்பவம் நடைபெற்ற இடம் நாமக்கல் மாவட்ட எல்லை என்பதால் அம்மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள் இன்று காலை முதல் மீட்புப்பணியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காவல் மற்றும் வனத்துறையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மிகவும் ஆபத்தான பகுதியில் சன்னதி உள்ளதால் கிரிவலம் செல்ல ஏற்கனவே கோவில் நிர்வாகத்தின் சார்பில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவில் அருகே கிரிவலம் செல்ல தடை என விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதனையும் மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதால், இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
    Next Story
    ×