search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டிடம் சேதம் அடைந்ததால் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்
    X

    கட்டிடம் சேதம் அடைந்ததால் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

    தேனி அருகே பூதிப்புரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதம் அடைந்து, மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால், அரசு பள்ளிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டது.
    தேனி:

    தேனி அருகே பூதிப்புரத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் கோரிக்கையை தொடர்ந்து இங்கு துணை சுகாதார நிலையம் செயல்பட்ட பழமையான கட்டிடத்தில், வர்ணம் பூசப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செயல்படத் தொடங்கியது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, வளையபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, ஆதிப்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். தினமும் சுமார் 200 முதல் 300 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் பழமையான இந்த கட்டிடத்தின் மேற்கூரை சில நாட்களுக்கு முன்பு பெயர்ந்து விழுந்தது. மேற்கூரை முற்றிலும் சேதம் அடைந்து, ஆங்காங்கே பெயர்ந்து விழுந்ததால் நோயாளிகள் பீதி அடைந்தனர். அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்களும் அச்சம் அடைந்தனர்.

    இதையடுத்து ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அந்த கட்டிடத்துக்கு எதிரே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டது. அந்த வகுப்பறையில் பாடம் படித்து வந்த மாணவ, மாணவிகள் பள்ளியில் உள்ள மற்ற வகுப்பறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    கடந்த 2 நாட்களாக அரசு பள்ளி கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. கட்டிடத்தின் முன்பு சாக்கடை தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி, கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்ட போதிலும், அதற்கான திட்டப் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடங்கிக் கிடக்கிறது. எனவே இப்பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×