search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை: ஆய்வு செய்த மத்திய குழுவினர் பேட்டி
    X

    டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை: ஆய்வு செய்த மத்திய குழுவினர் பேட்டி

    டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று தமிழகத்துக்கு வருகை தந்தனர்.

    தமிழகம் வந்த மத்திய குழுவினர் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.

    அதன்பின்னர் மத்திய குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். குழுவில் இடம்பெற்ற மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறியதாவது:
     
    டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. டெங்கு பாதிப்பு அதிகரிப்பிற்கு தமிழக அரசை மட்டுமே காரணமாக கூறமுடியாது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் இறப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

    தண்ணீரை தேக்கி வைக்கும் பழக்கமே டெங்கு கொசு புழுக்கள் உருவாக காரணமாகிறது. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது. 

    கொசுக்களை உருவாக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு தேவை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க 256 கோடி ரூபாய் தேவை என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், சேலம் மற்றும் திருச்சியிலும் ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், மத்திய குழுவினர் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு செய்யவுள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×