search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
    X

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அமைச்சர்கள், அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
    சேலம்:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மிக பெரிய பிரச்சனையாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. எங்கள் கணக்குப்படி 200-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

    30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் டெங்குக்கு இறந்துள்ளனர். ஆனால், மாநில சுகாதார துறை அமைச்சர் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என பொய் சொல்லி வருகிறார். ஒரு நபர் இறந்தாலும் அது ஆட்சிக்கு அழகல்ல. மத்திய, மாநில சுகாதார துறைக்கு இது மிகப் பெரிய தோல்வி என கருதுகிறேன்.

    முன்னாள் மத்திய சுகாதார துறை மந்திரி என்ற வகையில், 5 மாதத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து நான், பல்வேறு வகையில் எடுத்துரைத்தேன். அப்போதெல்லம் அமைச்சர்கள் எல்லாம் பல்வேறு விதமாக பேசி வந்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் டெங்கு என ஒப்புக்கொள்ளாமல் மக்களை திசை திருப்பும் வேலைகளை செய்து வந்தனர்.

    காய்ச்சலை பரப்பும் கொசுக்களை இந்திய மருத்துவ கவுன்சிலும், உலக சுகாதார அமைப்பும் ஆய்வு செய்து எந்த வகையான கொசு, ஜிகா வைரஸ் பரப்பும் கொசுவா? அல்லது டெங்கு கொசுவா? அல்லது சிக்குன் குனியா பரப்பும் கொசுவா? என கண்டுபிடிக்க வேண்டும்.


    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அமைச்சர்கள், அதிகாரிகள் முழுவீச்சில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். மேலும் பொது மக்களுக்கு தினமும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும். இந்த நிலவேம்பு கசாயம் நாங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொடுத்து வருகிறோம். சேலத்தில் ஏன்? அதிகமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்றால் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குண்டும், குழிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

    பேட்டியின் போது, மாநில துணை பொதுச் செயலாளர் இரா.அருள், பசுமை தாயகம் சத்திரிய சேகர், துணை தலைவர் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணையன், துணை செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×