search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏழுமலை எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: நள்ளிரவில் ஆதரவாளர்கள் மறியல்
    X

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏழுமலை எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: நள்ளிரவில் ஆதரவாளர்கள் மறியல்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏழுமலை எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய கோரி நள்ளிரவில் ஆதரவாளர்கள் மறியல் ஈடுப்பட்டனர்.

    திருவள்ளூர்:

    அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏழுமலை நேற்று இரவு திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

    பின்னர் அவர் காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். வெள்ளவேடு அருகே உட்கோட்டை கிராமத்தில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் நைனா கண்ணு என்பவர் திடீரென ஏழுமலையின் காரை வழிமறித்தார்.

    அவர் காரை உருட்டுக் கட்டையால் தாக்கினார். இதில் காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த தாக்குதலில் ஏழுமலையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலையின் ஆதரவாளர்கள் திரண்டதால் தாக்குதல் நடத்திய நைனா கண்ணு தப்பி சென்று விட்டார்.

    பலத்த காயம் அடைந்த ஏழுமலையை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே ஏழுமலை தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரி முன்பு நள்ளிரவு 1 மணியளவில திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து வெள்ளவேடு போலீசார் நைனா கண்ணு மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெள்ளவேடு அடுத்த நேமத்தை சேர்ந்த சுகுமார் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நேற்று இரவு இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த 2 இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் நொறுக்கி தப்பி சென்று விட்டனர்.

    Next Story
    ×