search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுக்கு ‘பரோல்’ இன்றுடன் முடிவடைகிறது
    X

    சசிகலாவுக்கு ‘பரோல்’ இன்றுடன் முடிவடைகிறது

    சசிகலாவுக்கு பரோல் இன்றுடன் முடிவடைய இருப்பதால் கடைசியாக 5-வது நாளாக இன்று ஆஸ்பத்திரிக்கு வந்து ம.நடராஜனை பார்க்க வருவார் என்று கூறப்படுகிறது.
    சென்னை:

    புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் (வயது 74) சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள சசிகலா சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருக்கிறார். தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ள கணவர் ம.நடராஜனை தினசரி சந்தித்து, அவருடைய உடல்நிலையையும் டாக்டர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.



    இந்தநிலையில் நேற்று 4-வது நாளாக ம.நடராஜனை பார்ப்பதற்காக தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் இருந்து நேற்று பகல் 11.30 மணிக்கு புறப்பட்டார். அவருடன் இளவரசியின் மகன் விவேக், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் உடன் வந்தனர்.

    பகல் 12.45 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்த சசிகலாவின் கார் மீது கட்சி தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்றதுடன், வாழ்த்து கோஷங்களும் எழுப்பினர். தொடர்ந்து திருஷ்டி பூசணிக்காய் சுற்றி போட்டு உடைத்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் முதல் தளத்தில் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 2005-ம் எண் கொண்ட அறைக்கு சென்றார். அவருடன் வந்தவர்கள் 2006-ம் எண் கொண்ட அறையில் அமர்ந்து இருந்தனர். அறையில் இருந்தபடியே டாக்டர்களை அழைத்து ம.நடராஜனின் உடல் நிலை குறித்து சசிகலா கேட்டறிந்தார். பின்னர் சசிகலாவிடம் டாக்டர்கள் கூறியதாவது:-

    நடராஜன் படிப்படியாக குணமடைந்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு ‘டிரக்கியாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டுள்ளதால் பேச முடியாது. ஆனால் மருத்துவர்கள் கூறுவதை அவரால் புரிந்து கொண்டு அதன்படி செயல்பட முடிகிறது. தொடர்ந்து அவர் எங்களின் (டாக்டர்கள்) தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். எதிர்பார்த்த அளவு அவருடைய உடல்நிலை படிப்படியாக தேறி வருகிறது.

    இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.

    பரோல் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் கணவர் ம.நடராஜனிடம் மனம் விட்டு பேசமுடியவில்லையே? என்று உறவினர்களிடம் சசிகலா வருத்தப்பட்டு கூறி உள்ளார். பின்னர் நேற்று பகல் 3.30 மணிக்கு ஆஸ்பத்திரியின் முதல்தளத்தில் இருந்து சசிகலா தரைதளத்தில் கார் நிற்கும் பகுதிக்கு கீழே இறங்கி வந்தார். பின்னர் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    தொடர்ந்து இன்றுடன் பரோல் முடிவடைய இருப்பதால் கடைசியாக 5-வது நாளாக இன்று (புதன்கிழமை) ஆஸ்பத்திரிக்கு வந்து ம.நடராஜனை பார்க்க வருவார் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×