search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறுவை சிகிச்சைக்கு பிறகு நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம்
    X

    அறுவை சிகிச்சைக்கு பிறகு நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம்

    அறுவை சிகிச்சைக்கு பிறகு ம.நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா நேற்று 30 நிமிடம் உடன் இருந்து அவரை கவனித்தார்.
    சென்னை:

    உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ம.நடராஜனை பார்க்க சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி சசிகலாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய 5 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6-ந்தேதி அவர் சென்னை வந்தார்.

    சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் சசிகலா தங்கியுள்ளார். கடந்த 2 நாட்களாக ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் கணவர் ம.நடராஜன் அருகில் இருந்து அவரை கவனித்துக்கொண்டார்.

    இந்நிலையில் நேற்று 3-வது நாளாக காலை 10.50 மணிக்கு தியாகராயநகரில் இருந்து ஆஸ்பத்திரிக்கு சசிகலா புறப்பட்டார். அவருடன் இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகீலா, திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோரும் சென்றனர்.

    ஆஸ்பத்திரிக்கு 12.10 மணிக்கு சசிகலா வந்தார். முதல்தளத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை எண் 2005-க்கு சென்றார். 12.45 மணிக்கு ம.நடராஜன் சிகிச்சை பெற்று வரும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு 30 நிமிடம் அவரை அருகில் இருந்து கவனித்து கொண்டார்.

    ம.நடராஜனுக்கு ‘டிரக்கியாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டு உள்ளதால் அவரால் பேச முடியவில்லை. அதனால் சைகை மூலமே சசிகலாவுடன் பேசினார்.

    பிற்பகல் 1.15 மணிக்கு மீண்டும் அறை எண் 2005-க்கு அவர் சென்றார். அங்கு, டாக்டர் வெங்கடேஷ், பாஸ்கரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் 3 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தியாகராயநகர் இல்லத்துக்கு சசிகலா புறப்பட்டார். தியாகராயநகர் இல்லத்துக்கு சுமார் 4.30 மணி அளவில் சசிகலா வந்தார். முன்னதாக டி.டி.வி.தினகரனின் தந்தை டி.விவேகானந்தம், ம.நடராஜனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    இதனிடையே குளோபல் ஆஸ்பத்திரி கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குனர் டாக்டர் கே.இளங்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நடராஜனின் கல்லீரல், சிறுநீரகத்தின் செயல்பாடுகளை டாக்டர் முகமது ரீலா தலைமையிலான டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு பொருத்தப்பட்டுள்ள கல்லீரல், சிறுநீரகம் நல்ல முறையில் இயங்குகின்றன. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×