search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரண்பேடி கவர்னராக நீடித்தால் புதுவைக்கு வளர்ச்சியே இருக்காது: அமைச்சர் கந்தசாமி ஆவேசம்
    X

    கிரண்பேடி கவர்னராக நீடித்தால் புதுவைக்கு வளர்ச்சியே இருக்காது: அமைச்சர் கந்தசாமி ஆவேசம்

    புதுவை கவர்னராக கிரண்பேடி தொடர்ந்து நீடித்தால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் கடும் மோதல் இருந்து வருகிறது.

    காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில் பல பிரச்சினைகளில் மோதல் உச்சகட்டத்தை எட்டுவது வாடிக்கையாகி வருகிறது.

    சமீபத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மோதல் உச்சகட்டம் அடைந்தது. கவர்னர் புகாரின்பேரில் சி.பி.ஐ. போலீசார் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் புதுவையில் பணிசெய்ய அதிகாரிகள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இத்தகைய சூழலில் டெல்லி பாராளுமன்றம் முன்பு கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்திருந்தார். இதனால் கந்தசாமி, கவர்னர் கிரண்பேடி இடையே தனிப்பட்ட மோதல்போக்கும் உருவாகியுள்ளது.

    இதுதொடர்பாக அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-

    கவர்னர் நிறுத்தி வைத்துள்ள பெரும்பாலான நலத்திட்டங்கள் என் துறையை சார்ந்தது. இலவச அரிசி, விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி, ஆதிதிராவிட மாணவர்களுக்கு உயர்கல்வி வரை கல்வி உதவித்தொகை, துறைமுகம் தூர்வாரும் பணி என பல பணிகள் என் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நான் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு பதில்கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் வெறும் ரூ.24 கோடிதான்.

    ஆனால் உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா முதல்-மந்திரி தான் பதவியேற்றவுடன் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

    ஆனால் இங்கு சொற்ப தொகைக்கு அனுமதி வழங்காமல் மத்திய உள்துறைக்கு கோப்புகளை அனுப்பி வைத்துள்ளார். புதுவை மக்கள் மீது அக்கறை இருந்தால் விவசாயிகள், ஆதிதிராவிட மாணவர்கள், மீனவர்கள், ஏழை மக்கள் பயனடையும் திட்டங்களை தடைபடுத்துவார்களா? இதனால்தான் பாராளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவித்துள்ளேன்.

    இதைத்தொடர்ந்து தன்னை சந்திக்க வரும்படி கவர்னர் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளார். என் மகனையும் அழைத்து வரும்படி கவர்னர் கூறியிருந்தார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்து கவர்னருக்கு கடிதமும் அனுப்பினேன். உடனடியாக நேற்று நானும், என் மகனும் கவர்னரை சந்திப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டனர்.

    இந்த புகைப்படம் வெளியானவுடன் எப்போது கவர்னரை சந்தித்தீர்கள்? என்று பலர் கேள்வி எழுப்பினர். இதன்பிறகு இந்த படம் பழையபடம் என கவர்னர் தன் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். நான் அமைச்சராக பொறுப்பேற்றபோது என் மகனுடன் சென்று கவர்னரை பார்த்தேன். அந்த புகைப்படத்தை தற்போது சந்தித்ததுபோல வெளியிட்டனர். பின்னர் வேறு கருத்தை தெரிவித்தனர். தொடர்ந்து கவர்னராக கிரண்பேடி நீடித்தால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே ஓராண்டாக எந்த வளர்ச்சியும் புதுவையில் இல்லை. இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காகவே குரல் கொடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×