search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் விடுபட்டு போன இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டம்: நாராயணசாமி அறிவிப்பு
    X

    புதுவையில் விடுபட்டு போன இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டம்: நாராயணசாமி அறிவிப்பு

    புதுவை பிராந்தியத்தில் நகர்புறத்தில் விடுபட்டுள்ள இடங்களில் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் சன்வே ஓட்டலில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்- அமைச்சர் நாராயணசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    இந்த கருத்தரங்கில் பிரெஞ்சு தூதரக பிரதிநிதிகள் ஜின்மார்க், கேத்தரின், ஏ.எப்.டி. வங்கி இயக்குனர் நிக்கோலஸ், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், சிவா, ஜெயமூர்த்தி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, செயலாளர்கள் சுந்தரவடிவேல், மிகிர்வரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில், முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து தெளிவான ஒரு வழிகாட்டுதலை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை நகரத்தை ஸ்மார்ட் சிட்டிக்காக தேர்வு செய்ததை தொடர்ந்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவை ஸ்மார்ட் சிட்டி டெவஸ்மெண்ட் லிமிடெட் என்னும் கம்பெனியை புதுவை அரசு தொடங்கியது.

    புதுவை குடிநீர் மற்றும கழிவு நீர் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்துக்கு அளித்து வரும் கடன் வசதிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். குறிப்பாக பிரெஞ்சு தூதர் இன்று புதுவை வந்து இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு அவரை மிகவும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

    பிரெஞ்சு அரசு ஏ.எப்.டி. வங்கி மூலம் புதுவை அரசுக்கு அடிப்படை கட்டுமான ஆதாரத்துக்கு தேவையான தொழில்நுட்ப கருத்துக்களை வழங்கிட ஏதுவாக 2016 ஜனவரி மாதத்தில் ஒரு ஒப்பந்தம் புதுவை அரசுடன் செய்து கொண்டது.

    இதன் அடிப்படையில் இன்று புதுவை குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.454 கோடி கடனுதவி செய்ய திட்ட ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட உள்ளது. இதற்காக பிரெஞ்சு அரசு மற்றும் பிரெஞ்சு தூதர் தெரிவித்து வரும் ஆதரவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    புதுவை பிராந்தியத்தில் நகர்புறத்தில் விடுபட்டுள்ள இடங்களில் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கவும், காரைக்கால் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் அமைத்திடவும், ஏனாம் மற்றும் மாகி பகுதியில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்துக்கும் ஏ.எப்.டி. வங்கி மூலம் கடன் பெற்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இன்றைய கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருக்கும் பிரெஞ்சு நாட்டின் கம்பெனிகளை பார்க்கும் போது புதுவை அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் பங்கு கொள்ள அவர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இது புதுவை மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இடையே நிலவி வரும் வலுவான தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    இன்றைய கால கட்டத்தில் உலக அளவில் உள்ள நகரங்கள், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளை மிக வேகமாக நிறைவேற்றி வருகின்றன.

    அவற்றை நினைவில் கொண்டு புதுவை நகரத்தில் உணரப்படும் மக்கள் தொகை உயர்வு, குடிநீரின் தன்மை, சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல், நகர்ப்புற வாகன நெரிசல், வீட்டு வசதி, வேலையின்மை மற்றும் வாகன நிறுத்த வசதி மேம்படுத்துதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு புதுவை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கருத்தரங்கு கூட்டத்தில் நிபுணர்களும், துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசித்து உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக புதுவை நகரத்தை புணரமைக்க வேண்டுமாறு வற்புறுத்துகிறேன்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்காமல் 4-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    எனவே, தங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என கூறி அவர்கள் இருவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
    Next Story
    ×